Last Updated : 24 Mar, 2021 08:22 PM

 

Published : 24 Mar 2021 08:22 PM
Last Updated : 24 Mar 2021 08:22 PM

வியாபார நிறுவனமாக சட்டப்பேரவையை மாற்றிய அரசியல்வாதிகளைத் தேர்தலில் புறக்கணியுங்கள்: கே.பாலகிருஷ்ணன்

புதுச்சேரி

வியாபார நிறுவனமாகச் சட்டப்பேரவையை மாற்றிய அரசியல்வாதிகளை வரும் தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரியில் மதச்சார்பற்ற அணியில் சிபிஎம் இடம் பெற்றிருந்தது. காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்குத் தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. ஏனாமிலும் வேட்பாளர் இல்லாததால் சுயேச்சையை காங்கிரஸ் ஆதரித்துள்ளது. ஆனால், சிபிஎம் கட்சிக்கு ஒரு தொகுதியைக் கூட ஒதுக்கவில்லை. இதையடுத்து, புதுச்சேரியில் முத்தியால்பேட்டை தொகுதியில் மட்டும் சிபிஎம் தனித்துப் போட்டியிடுகிறது. மாஹேவில் சுயேச்சை வேட்பாளரை சிபிஎம் ஆதரிக்கிறது.

இதையடுத்து, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தியால்பேட்டை தொகுதி வேட்பாளர் சரவணனை ஆதரித்து, கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்த வாகனத்தில் இன்று (மார்ச் 24) மாலை தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாவது:

"புதுவை மாநிலத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல் இது. புதுவை மாநிலத்தில் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைப்பது யார், எந்த எம்எல்ஏ எந்தப் பக்கம் சாய்வார் என்பது தெரியாது. காற்றடிக்கும் திசையில் எம்எல்ஏக்கள் சாய்ந்துபோகும் சூழல் உள்ளது. சிபிஎம் வேட்பாளர் வென்றால், சுனாமியே வந்தாலும் கட்சி மாறாமல் கம்யூனிஸ்ட் கட்சியிலேயே நீடித்துச் செயல்படுவார். அதே நேரத்தில், பிற கட்சி எம்எல்ஏக்கள் நிலையாக இருப்பது சந்தேகம்தான். புதுச்சேரி மாநிலத்தில் எம்எல்ஏக்களை விற்பனை செய்யும் அரசியல் வியாபாரச் சூழல்தான் நிலவுகிறது.

புதுச்சேரியில் கடந்த காலத்தில் எம்எல்ஏக்களாகத் தேர்வு செய்யப்பட்ட பலர், பணத்துக்காக விலை போனார்கள். புதுச்சேரி சட்டப்பேரவையை வியாபார நிறுவனமாக மாற்றினார்கள். அத்தகைய நிலையை உருவாக்கிய அரசியல்வாதிகளை இத்தேர்தலில் புறக்கணிக்க வேண்டும். புதுவையில் எந்தக் கட்சி வந்தாலும், மக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் நிலை உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை ஏறியுள்ளது. சமையல் எரிவாயு மானியம் குறைக்கப்பட்டுள்ளது. புதுவை நியாயவிலைக் கடைகளில், அரிசி வழங்காமல் பணம் தருவதாகக் கூறினர். அதுவும் வழங்காமல் முடங்கியுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு பொதுத்துறை நிறுவனங்களையும், புதுச்சேரி மின் துறையைத் தனியார் மயமாக்கும் வேலையில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து மக்களைத் திரட்டிப் போராடுகிறது. பாஜகவை இத்தேர்தலில் புறக்கணிக்க வேண்டும்.

புதுவையில் புதிய அரசு, எப்படி யார் தலைமையில் அமையும் என்ற கேள்வி எழுந்துள்ளது. புதுவையை பாஜக குறி வைத்துள்ளது. அதனால் பலரை விலைக்கு வாங்கியுள்ளனர். ஆட்சியைப் பிடிக்கத் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் விலைக்கு வாங்கினால், எங்கள் கட்சியில் தேர்வாகும் எம்எல்ஏ விலைபோக மாட்டார். அதனால் தரமான எம்எல்ஏவைத் தேர்ந்தெடுங்கள்".

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

இத்தேர்தல் பிரச்சாரத்தின்போது கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் சுதா, பிரதேச செயலாளர் ராஜாங்கம், மூத்த தலைவர் முருகன் மற்றும் செயற்குழு, பிரதேசக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x