Published : 24 Mar 2021 07:03 PM
Last Updated : 24 Mar 2021 07:03 PM
மதுரையில் நடந்த திமுக தலைவர் ஸ்டாலினின் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரச்சாரத்தில் குவாரிகள் திறப்பிற்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கு கிரானைட் குவாரிகள் உள்ள கிராமங்களில் திமுகவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது திமுக தேர்தல் பிரச்சாரத்தில் கிரானைட் குவாரிகள் திறப்பு வாக்குறுதி கைவிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் திமுக தலைவர் ஸ்டாலின் மதுரை ஒத்தக்கடையில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் பேசியபோது, கிரானைட் குவாரிகள் மூடப்பட்டதால் தொழிலாளர்கள் வேலையிழப்பு பற்றிய குறும்படம் எல்இடி டிவியில் ஒளிபபரப்பப்பட்டது.
அதனால், குவாரிகள் திறக்கப்படாததால் தொழிலாளர்கள் சிரமப்படுவதாகவும், குவாரிகள் திறக்க வேண்டும் போன்ற கோரிக்கைள் முன் வைக்கப்பட்டன.
அதனால், மூடப்பட்ட மதுரை குவாரிகள் மீண்டும் திறப்பதற்கு ஸ்டாலின் வாக்குறுதி அளிக்கிறாரா? என்று குவாரிகளால் பாதிக்கப்பட்ட மதுரை கிரானைட் கிராமங்களில் திமுகவிற்கு எதிராகக் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
அதிர்ச்சியடைந்த திமுக, உடனடியாக சுதாரித்துக் கொண்ட கிரானைட் குவாரிகள் திறப்பு பற்றி வாய்திறக்கவில்லை. ஸ்டாலினும், அதன்பிறகு மதுரை பிரச்சாரத்திற்கு வந்தபோதும் குவாரிகள் திறப்பு பற்றி எதுவும் பேசவில்லை.
மதுரை மாவட்ட திமுக வேட்பாளர்களும் மறந்தும் கூட தேர்தல் பிரச்சாரத்திலும் கிரானைட் குவாரிகள் திறப்பு வாக்குறுதி இடம்பெறவில்லை.
ஆனால், ஸ்டாலின் பிரச்சாரத்தில் இடம்பெற்ற கிராணைட் குவாரி குறும்படம் விஷயத்தை அதிமுக வேட்பாளர்கள் கையில் எடுத்து, தற்போது திமுகவிற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக கிராணைட் குவாரிகள் மதுரை கிழக்கு, மேலூர் சட்டமன்ற தொகுதிகளில் அதிகளவு உள்ளன. இந்த தொகுதிகளில் தகுதியான கிரானைட் குவாரிகளை திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், அதே நேரத்தில் அந்த குவாரிகளுடன் சேர்ந்து கிராமங்களுக்கு மிக அருகில் நகர்புறங்களை ஒட்டி ஒத்தக்கடை உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் குவாரிகளை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மதுரை கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன், தனது பிரச்சாரத்தில் ‘‘கடந்த 10 ஆண்டாக குவாரிகளால் எந்த தொந்தரவும் இல்லாமல் மக்கள் நிம்மதியாக வசிக்கின்றனர்.
மீண்டும் ஆட்சிக்கு திமுக வந்தால் குவாரிகள் மீண்டும் திறக்கப்பட்டு மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறும் அவலம் தொடரும், ’’ என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
இது அந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மூர்த்திக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக வேட்பாளர்களின் இந்த பிரச்சராத்திற்கு கிராணைட் கிராமங்களில் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் திமுக வேட்பாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT