Published : 24 Mar 2021 05:21 PM
Last Updated : 24 Mar 2021 05:21 PM
வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அனைவரும் மனசாட்சிப் படி தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என, தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மற்றும் மகளிர் திட்டத்தின் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கலந்து கொண்டு பெண்கள் வரைந்த விழிப்புணர்வு ரங்கோலி கோலத்தை பார்வையிட்டார்.
மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் பெண்கள் அனைவரும் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்தும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு மூலம் அறிந்து கொள்வது குறித்தும் பெண்களுக்கு ஆட்சியர் செயல்முறை விளக்கம் அளித்தார். மேலும், பெண்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது ஆட்சியர் செந்தில் ராஜ் பேசியதாவது:
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஆத்தூர் பகுதியில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் மனசாட்சியின்படி வாக்களித்து ஜனநாயக கடமையற்ற வேண்டும். வாக்களிப்பது நமது கடமை மற்றுமின்றி உரிமையாகும். நமக்கும் நாட்டுக்கும் நல்லது எது என்பது குறித்து வாக்காளர்கள் சுய பரிசோதனை செய்து கொண்டு தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தனப்பிரியா, மகளிர் திட்ட இயக்குநர் பிச்சை, துணை ஆட்சியர் (பயிற்சி) சதீஷ்குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், புத்தாக்க திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், திருச்செந்தூர் வட்டாட்சியர் முருகேசன், ஆத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரங்கசாமி, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் சாமத்துரை, மல்லிகா மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT