Published : 24 Mar 2021 05:01 PM
Last Updated : 24 Mar 2021 05:01 PM
புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணிக்குள் எவ்வித பிணக்குமின்றி ஒற்றுமையுடன் செயல்படுவதாக புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவரும், காரைக்கால் வடக்குத் தொகுதி வேட்பாளருமான ஏ.வி.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கீழக்காசாகுடி, எடைத்தெரு, கூட்டுறவு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று (மார்ச் 24) வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அவர் கூறியதாவது:
"தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிக்கும்போது, பெரும்பான்மையான மக்கள் சாலை, மின்சாரம், கழிவுநீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என தெரிவிக்கின்றனர். இத்தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளவர், தொகுதியை மேம்படுத்தவில்லை என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. சட்டப்பேரவை உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க கண்டிப்பாக விரைந்து நடவடிக்கை எடுப்பேன் என மக்களிடம் உறுதியளித்து வருகிறேன்.
புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் - திமுக கூட்டணியை உறுதியாக ஆதரிப்பார்கள். புதுச்சேரியில் நிலவும் பாஜக மற்றும் பிரதமர் நரேந்திரமோடி மீதான எதிர்ப்பலை இக்கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும். தொடக்கத்தில் காங்கிரஸ் - திமுக இடையே சிறு பிணக்குகள் இருந்தாலும் தற்போது எவ்வித பிணக்குமின்றி தேர்தல் பணியாற்றுகிறோம். மதச்சார்பற்ற கூட்டணி ஒற்றுமையுடன் செயல்படுகிறது.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களிடம் புதுச்சேரிக்கு வந்து பிரச்சாரம் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி, மக்களவை உறுப்பினர் வி.வைத்திலிங்கம் ஆகியோர் காரைக்கால் வந்து பிரச்சாரம் செய்யவுள்ளனர்.
நான் புதுச்சேரிக்கு சென்றுவிட்டதாக சிலர் பொய்யான பிரச்சாரம் செய்து வருகின்றனர். காரைக்கால் தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில்தான் எனது வீடு உள்ளது. எனது சொந்த ஊர் காரைக்கால் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, இது போன்ற பொய்யான பிரச்சாரத்தை தவிர்க்க வேண்டும்".
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT