Last Updated : 24 Mar, 2021 04:54 PM

 

Published : 24 Mar 2021 04:54 PM
Last Updated : 24 Mar 2021 04:54 PM

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 7,312 பேர் வாக்காளர்களாக சேர்ப்பு; 5 தொகுதிகளிலும் பெண் வாக்காளர்களே அதிகம்

பிரதிநிதித்துவப் படம்

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றத்தின் கீழ் புதிதாக 7,312 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 5 தொகுதிகளிலும் ஆண்களை காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், பெயர் மாற்றம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தவறியவர்கள் தங்களது பெயரை சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், பெயர் திருத்தம் ஆகியவை செய்ய வேண்டியவர்கள் அதற்கான விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து சிறப்பு முகாமில் வழங்க அறிவுரைகள் வழங்கப்பட்டன.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் பெயர் சேர்க்க 5 தொகுதிகளில் 8,292 விண்ணப்பங்களும், பெயர் நீக்கம் செய்ய 268 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. வேலூர் மாவட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் பரிசீலிக்கப்பட்டன.

இதில் 7,312 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல, நீக்கம் படிவம் வழங்கிய 268 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில், காட்பாடி சட்டப்பேரவை தொகுதியில் பெயர் சேர்க்க 1,329 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 1,187 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். வேலூர் தொகுதியில் 2,067 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்திருந்தனர். அதில், 1,785 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அணைக்கட்டு தொகுதியில் 1,620 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்திருந்தனர். அதில் 1,280 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். கே.வி குப்பம் (தனி) தொகுதியில் 1,101 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பத்திருந்த நிலையில் 1,049 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல, குடியாத்தம் (தனி) தொகுதியில் 2,175 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பத்திருந்த நிலையில், 2,011 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியல்படி, வேலூர் மாவட்டத்தில் புதிதாக 7,312 பேர் புதிய வாக்காளர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

புதியதாக பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் செய்யப்பட்ட பிறகு வேலூர் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் விவரம் வருமாறு:

1. காட்பாடி: ஆண்கள் - 1,20,125; பெண்கள் - 1,28,408; மாற்றுப்பாலினத்தவர்கள் - 34; மொத்தம் - 2,48,567

2. வேலூர்: ஆண்கள் - 1,21,878; பெண்கள் - 1,31,145; மாற்றுப்பாலினத்தவர்கள் - 26; மொத்தம் - 2,53,049

3. அணைக்கட்டு: ஆண்கள் - 1,23,483; பெண்கள் - 1,31,041; மாற்றுப்பாலினத்தவர்கள் - 38; மொத்தம் - 2,54,562

4. கே.வி.குப்பம்: ஆண்கள் - 1,10,315; பெண்கள் - 1,14,956; மாற்றுப்பாலினத்தவர்கள் - 06; மொத்தம் - 2,25,277

5. குடியாத்தம்: ஆண்கள் - 1,40,227; பெண்கள் - 1,49,410; மாற்றுப்பாலினத்தவர்கள் - 40; மொத்தம் - 2,89,677

மொத்தம்: ஆண்கள் - 6,16,028; பெண்கள் - 6,54,960; மாற்றுப்பாலினத்தவர்கள் - 144; மொத்தம் - 12,71,132

புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட பிறகு வேலூர் மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளில் 12 லட்சத்து 71 ஆயிரத்து 132 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்களை காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிக அளவில் இருப்பதால் 5 தொகுதிகளிலும் வெற்றி, தோல்விகளை தீர்மானிப்பதில் பெண்களே முக்கியத்தும் வாய்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x