Last Updated : 24 Mar, 2021 04:24 PM

 

Published : 24 Mar 2021 04:24 PM
Last Updated : 24 Mar 2021 04:24 PM

காலியாக உள்ள 3.50 லட்சம் அரசுப் பணிகள் தமிழர்களுக்கே: ஸ்டாலின் உறுதி

மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்.

சேலம்

அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3.50 லட்சம் பணியிடங்களில் தமிழர்கள் மட்டும் நியமிக்கப்படுவர் என்று, ஆத்தூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில், திமுக வேட்பாளர்கள் ஆத்தூர் - சின்னதுரை, கெங்கவல்லி - ரேகா பிரியதர்ஷினி, சங்கராபுரம் - உதயசூரியன், ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன், உளுந்தூர்பேட்டை - மணிகர்ணம், காங்கிரஸ் வேட்பாளர் கள்ளக்குறிச்சி - மணிரத்னம் ஆகியோரை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 24) பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திரளான கூட்டத்தினர் மத்தியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தேர்தல் பிரச்சாரத்துக்காக வாக்கு சேகரிப்பதற்காக மட்டும் வந்து போகும் ஸ்டாலின் நான் இல்லை. உங்களின் பிரச்சினைகளுக்காக வாதாடுகிற ஸ்டாலின் தான் வந்திருக்கிறேன். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டாலும், இங்கும் எனக்காக வாக்கு சேகரிக்கவே வந்திருக்கிறேன். இங்குள்ள திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தான் நான் முதல்வராக முடியும்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் மத்திய வேளாண் சட்டங்களை நிறைவேற்ற மாட்டோம் என்று தீர்மானம் கொண்டு வருவோம். இயற்கை விவசாயத்துக்கு வேளாண் துறையில் தனி பிரிவு, நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம் ஆகியவை அமைக்கப்படும். விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை நாங்கள் தான் முதலில் கூறினோம். முதல்வர் பழனிசாமி செயல்படுத்தினார்.

'ஆண்டவன் சொல்றான்... அருணாச்சலம் செய்கிறான்' என்று ரஜினிகாந்த் சினிமாவில் கூறியது போல, நான் சொன்னவற்றை முதல்வர் பழனிசாமி செய்து காட்டுகிறார்.

தமிழகத்தில் அரசுத்துறையில் காலியாக உள்ள 3.50 லட்சம் பணியிடங்களில் தமிழர்களை மட்டும் நியமிப்போம்.

மரவள்ளி விவசாயிகளுக்காக ஆத்தூரில், சேலம் சேகோ சர்வ்-ன் கிளை அமைக்கப்படும். கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை இடையே ரயில் பாதை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

தலைவாசல் - கெங்கவல்லி பகுதிகளுக்கு மேட்டூர் உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்படும். கள்ளக்குறிச்சி, வாழப்பாடியில் நவீன பேருந்து நிலையம், கள்ளக்குறிச்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், சங்கராபுரத்தில் மரவள்ளி தொழிற்சாலை, ரிஷிவந்தியத்தில் நெல் கொள்முதல் நிலையம், ரிஷிவந்தியம் தனி வட்டமாக உருவாக்கப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x