Published : 24 Mar 2021 03:45 PM
Last Updated : 24 Mar 2021 03:45 PM
நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி நமக்கே கொடுக்கப்படுகிறது, இதைவிடப் பெருமை ஒரு இந்தியனுக்கு இருக்க முடியாது, வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட நமது நாட்டின் தடுப்பூசிக்காகக் காத்திருக்கின்றனர் எனப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில் இலவச கரோனா தடுப்பூசி முகாம், கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று (மார்ச் 24) நடைபெற்றது. முகாமை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
‘‘கரோனா தடுப்பூசியை அதிகப்படியான மக்களுக்குப் போட வேண்டும். இதற்காகப் புதுச்சேரியில் ஏற்கனவே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்குத் தடுப்பூசி அளிக்கப்பட உள்ளது. நாங்கள் மருத்துவக் கல்லுாரி மாணவர்களாக இருந்தபோது, எந்த நோய்க்கும் நம் நாட்டில் தடுப்பூசி தயாரிக்கப்படவில்லை. ஏதாவது ஒரு நாட்டில் இருந்து தடுப்பூசி கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருந்த காலம் போய், நமது விஞ்ஞானிகளின் முயற்சியாலும், பிரதமர் மோடியின் ஊக்கத்தாலும் நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி நமக்கே கொடுக்கப்படுகிறது. இதைவிடப் பெருமை ஒரு இந்தியனுக்கு இருக்க முடியாது.
வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட நமது நாட்டின் தடுப்பூசிக்காகக் காத்திருக்கின்றனர். இந்தியாவில் இருந்து 71 நாடுகளுக்குத் தடுப்பூசி ஏற்றுமதியாகி வருகிறது. வளர்ச்சியடைந்த நாடுகள்கூடத் தடுப்பூசியை தயாரிக்க முடியாமல், நமது தடுப்பூசியை ஏற்றுக் கொண்டுள்ளனர். முதலில் முன் களப்பணியாளர்களுக்குத் தடுப்பூசி கொடுக்கப்பட்டது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஒவ்வாமை வந்து விடும் என சிலர் நினைக்கின்றனர். இந்தியாவில் இதுவரை 4 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. புதுச்சேரியில் கரோனா தற்போது அதிகரித்து வருகிறது. இதற்காகத்தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுகொள்கிறோம். தடுப்பூசியை வைத்துக் கரோனாவைத் தடுப்போம். சில நாடுகளில் 5-வது அலை வீசி வருகிறது. இந்த நிலைக்கு நாம் சென்றுவிடக் கூடாது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இன்று உலக காச நோய் தினம். கரோனாவால் காசநோயை, விட்டு விட்டார்கள் எனக் குற்றச்சாட்டு உள்ளது. இந்தியாவில் வருடத்துக்கு 4 லட்சம் பேர் காச நோயால் உயிரிழக்கின்றனர். ஒரு நாளைக்கு, சராரியாக 1,400 பேர் உயிரிழக்கின்றனர். எனவே, இதனையும் மனதில் வைத்துக்கொண்டு, அதிலும் கவனம் செலுத்திட வேண்டும்.’’
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
இம்முகாமில் சுய உதவிக்குழு பெண்கள், திருநங்கைகள், விவசாயத் தொழிலாளர்கள், பொதுமக்கள் என பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT