Published : 24 Mar 2021 03:08 PM
Last Updated : 24 Mar 2021 03:08 PM
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்குள்ளேயே தனக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வந்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இன்று தொகுதியை விட்டு வெளியே கிளம்பி புதுக்கோட்டை வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தான் போட்டியிடும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடுகிறது. இத்தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக முதல்வர் பழனிசாமியைத் தவிர வேறு அதிமுக கூட்டணியில் இருந்து எந்த முக்கியத் தலைவர்களும் இதுவரை பிரச்சாரம் செய்யவில்லை.
மாவட்டத்தில் முக்கிய அடையாளமாகத் திகழும் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் விராலிமலை தொகுதிக்குள்ளேயே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததால், மற்ற தொகுதிகளில் போட்டியிடும் 5 அதிமுக வேட்பாளர்களுக்கு ஒருவிதமான சோகம் ஏற்பட்டது.
இந்நிலையில், திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துத் தினம் ஒருவர் பிரச்சாரம் செய்து வருவதால், தங்களுக்கும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பிரச்சாரம் செய்து தர வேண்டும் என எதிர்பார்த்து வந்தனர்.
அத்தோடு, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்துக்கான பொறுப்பாளராகவும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டிருப்பதால், சிவகங்கை மாவட்ட வேட்பாளர்களும் அமைச்சரின் பிரச்சாரத்தை எதிர்ப்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு முதல்முறையாக புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.ஆர்.கார்த்திக் தொண்டைமானுக்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டை அண்ணா சிலை, கிழக்கு ராஜ வீதி, பிருந்தாவனம் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பிரச்சாரம் செய்தார். தனது தொகுதியை விட்டுப் பிற வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்துக்கு கிளம்பியதால், சுழற்சி முறையில் தங்களையும் ஆதரித்து அமைச்சர் பிரச்சாரம் செய்வார் என மற்ற அதிமுக வேட்பாளர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT