Published : 24 Mar 2021 01:44 PM
Last Updated : 24 Mar 2021 01:44 PM
உதயநிதி ஸ்டாலின் டிஜிபியையே மிரட்டுகிறார் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம். ஸ்டாலின் நான் முதல்வரானால் எனக்கூறி அதிகாரிகளை மிரட்டுகிறார் என்று முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.
கரூர் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை அகியோரை ஆதரித்து, கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே இன்று (மார்ச் 24) நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
"திமுக குடும்பக் கட்சி. அது கட்சியல்ல. கார்ப்பரேட் கம்பெனி. அங்கு ஷேர் வாங்கி சேர்ந்திருப்பவர்தான் செந்தில்பாலாஜி. உடனே மாவட்டப் பொறுப்பு, வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு நானோ, விஜயபாஸ்கரோ பொறுப்புக்கு வரமுடியுமா?
அதிமுக ஜனநாயக இயக்கம். உழைத்தால் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும். கிளைச் செயலாளராகத் தொடங்கி இன்று முதல்வராக உயர்ந்து மக்கள் பணி செய்கிறேன். மக்கள்தான் முதல்வர். மக்கள் போடும் உத்தரவைச் செயல்படுத்துவதுதான் முதல்வர் பணி. ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என கனவு கண்டு கொண்டிருக்கிறார்.
ஆட்சியைக் கவிழ்க்க முயன்று ஓடிப்போனவர்தான் அக்கட்சி வேட்பாளர் செந்தில்பாலாஜி. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டப்பன் போலத்தான் செந்தில்பாலாஜி. ஆட்சியைக் கலைக்க திட்டமிட்டு சதி செய்தவர். அவர் கனவு நனவாகாது. தர்மம், நீதி வெல்லும். அநீதி வெல்லாது. வேஷம் போடுபவர் செந்தில்பாலாஜி. நமது வேட்பாளர் ஐஎஸ்ஐ ஒரிஜினல். செந்தில்பாலாஜி டூப்ளிகேட். போலியை நம்பாதீர்கள்.
அதிமுக ஊழல் செய்வதாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், பக்கத்தில் யாரை வைத்திருக்கிறார், செந்தில்பாலாஜியைத் தான் வைத்திருக்கிறார். நல்லவருக்கு வாக்களியுங்கள். நிறம் மாறும் பச்சோந்திக்கு அல்ல. ஸ்டாலின் பொய் கூறிவருகிறார்.
அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை என்கிறார். 2019-ம் ஆண்டு தொழில் முதலீட்டு மாநாடு மூலம் 3.50 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. 304 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 5.5 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாக 5 லட்சம் பேர் என 10 லட்சம் பேருக்கு மேல் வேலை கிடைக்கும்.
திமுக என்றாலேஅராஜக கட்சி, ரவுடி கட்சி, அட்டூழியம் செய்பவர்கள். உதயநிதி ஸ்டாலின் டிஜிபியையே மிரட்டுகிறார் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம். ஸ்டாலின் நான் முதல்வரானால் எனக்கூறி அதிகாரிகளை மிரட்டுகிறார். அதிகாரிகள் என்ன பிரச்சாரத்திற்கா செல்கின்றனர்? எவ்வளவு பயமுறுத்துகின்றனர், பாருங்கள். அதிகாரிகள் நிலை எப்படியோ? திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் படாதபாடுபடுவார்கள்.
இல்லத்தரசிகள் சுமையைக் குறைக்க வாஷிங் மெஷின், ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். வரும் ஏப். 1-ம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம், 18 வயது நிரம்பியவர்களுக்கு பயிற்சி அளித்து ஓட்டுநர் உரிமம் ஆகியவை செயல்படுத்தப்படும். திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற அதிமுகவுக்கு வாக்களியுங்கள்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
முன்னதாக, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் திமுகவிலிருந்து விலகிய ம.சின்னசாமி அதிமுகவில் இணைந்தார். அப்போது, 12 ஆண்டுகாலமாக சனி பிடித்திருந்ததாக அவர் தெரிவித்தார். திமுகவில் உண்மை, உழைப்பு, தியாகத்துக்கு இடம் கிடையாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். மேலும், ரஜினி ரசிகர் மன்ற மாவட்டச் செயலாளர் பரமேஸ்வரனும் அதிமுகவில் இணைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT