Published : 24 Mar 2021 01:23 PM
Last Updated : 24 Mar 2021 01:23 PM
உங்களுக்கு இலவசமாக ஒருநாள் மீன் குழம்பு தயார் செய்து தரமாட்டோம். ஆனால், வருடம் முழுவதும், உங்களுக்கு மீன் பிடிக்கும் தூண்டிலையும், மீன் பிடிக்கும் திறமையையும் கொண்டு சேர்ப்போம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (24-ம் தேதி) நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், அதன் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இவர், தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஒலம்பஸ், ராமநாதபுரம், சிவானந்தா காலனி உள்ளிட்ட இடங்களில் இன்று (24-ம் தேதி) வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின்போது கமல்ஹாசன் பேசியதாவது:
''நான் 234 தொகுதிகளுக்கும் சென்று வருவதால்தான் தினமும் இங்கு வர முடிவதில்லை. இந்தத் தொகுதிக்கு நாங்கள் செய்ய வேண்டியது குறித்து, தேர்தல் அறிக்கை தயார் செய்து கொண்டிருக்கிறேன். அதற்கு முன் உங்களிடம் பேசி, உங்களிடம் இருந்து என்ன வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள உள்ளேன். நான் திட்டம் போட்டு, அதை வைத்துக்கொள்ளுங்கள் என்று உங்களிடம் கூற முடியாது. உங்களுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டே செய்ய வேண்டும்.
நாங்களாக சில திட்டங்கள் வைத்துள்ளோம். அதையும் செய்யப் போகிறோம். நீங்கள் கூறும் திட்டங்களையும் செய்யப் போகிறோம். தமிழகம் முழுவதும் குடிநீர், சாக்கடை இவற்றைப் பராமரிக்காமல் இருப்பது, சுத்தம் செய்யாமல் இருப்பது உள்ளது. ஏழை எளிய மக்கள் வாழும் பகுதிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது போன்ற பிரச்சினைகள் உள்ளன.
வசதியானவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளிப் பார்த்தால் ஏழ்மை தாண்டவமாடுகிறது. இதை நாம் எல்லோரும் கவனிக்க வேண்டும். முக்கியமாக அரசியல்வாதிகள் கவனிக்க வேண்டும். அப்படிக் கவனிக்கும் அரசியல்தான் இனி வெற்றி பெறும். மக்களை மையப்படுத்தும் அரசியலைத்தான் நீங்கள் தூக்கிப் பிடிக்க வேண்டும். இலவசங்கள் கொடுக்கின்றனர். இலவசங்களால் ஏழ்மை போய் விடுமா?. இலவசங்களால் ஏழ்மை போய் விடாது.
இன்னும் கூறப் போனால், அவர்கள் உங்களுக்கு இலவசம் கொடுக்கக் கொடுக்க, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனின் தலையிலும் கடன் சுமை ஏறிக்கொண்டே போகிறது. இப்பொழுது கடன் ரூ.65 ஆயிரமாக உள்ளது. இது தொடர்ந்தால், எல்லார் தலையிலும் தலா ரூ.2 லட்சம் கடன் இருக்கும். தற்போது உள்ள கடன் தொகையை இரு மடங்காக மாற்றி விடுவார்கள். அதைத் தடுத்து நிறுத்த வேண்டியது உங்களது கடமை. அதற்கு இருக்கும் ஒரே கருவி மக்கள் நீதி மய்யம். அதன் ஒரு சிறு கருவி நான்.
என்னைக் கருவியாகப் பயன்படுத்துங்கள். உங்களுக்கு இலவசமாக ஒருநாள் மீன் குழம்பு தயார் செய்து தரமாட்டோம். ஆனால் வருடம் முழுவதும், உங்களுக்கு மீன் பிடிக்கும் தூண்டிலையும், மீன் பிடிக்கும் அந்தத் திறமையையும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம், அப்படிச் செய்தால், 10 பேருக்கு நீங்களே மீன் குழம்பு செய்து தரலாம். அதைச் செய்யாமல் இருப்பதற்குக் காரணம், உங்களைச் செய்ய வைத்து விட்டால், வறுமைக்கோட்டுக்கு மேல் உங்களைக் கொண்டு வந்துவிட்டால், இந்த மாதிரி அயோக்கியர்களை நீங்கள் திரும்பிப் பார்க்க மாட்டீர்கள்.
அந்த பயத்தினால்தான் ஏழ்மையை, ஏழ்மையாகவே வைத்திருக்கின்றனர். அதிலிருந்து மாறுவோம். மாற்றுவோம். அதை நீங்கள் செய்ய முடியும். உங்கள் சின்னம் ‘டார்ச் லைட்’ என மகிழ்ச்சியாகக் கூறுங்கள். இந்தக் குரல் தமிழகம் முழுவதும் கேட்கத் தொடங்கியுள்ளது. உங்கள் குரல் தனிக்குரல் அல்ல. எல்லா இடத்திலும் எதிரொலிக்கிறது. உங்கள் சின்னம் டார்ச் லைட் என்று சொன்னால், நாளை நமதே''.
இவ்வாறு கமல் பேசினார்.
முன்னதாகத் திருவள்ளுவர் நகரில் கமல்ஹாசன் பேசும்போது,‘‘தமிழகத்தைச் சீரமைக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. எங்கிருந்தாலும் எனது மனது இங்குதான் உள்ளது. தொகுதிக்கு ஏற்றவாறு தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. நேர்மைக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். நான் அடிக்கடி வருவேன். எனக்கு இது இன்னொரு வீடாக உள்ளது. என்னை வெளியூர்க்காரர் என்று சொல்பவரே, மயிலாப்பூர் அம்மாதான். யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT