Published : 24 Mar 2021 12:36 PM
Last Updated : 24 Mar 2021 12:36 PM

ஒரே மேடையில் ஸ்டாலின் - ராகுல்: மார்ச் 28-ல் சேலத்தில் பொதுக்கூட்டம்: 14 தலைவர்கள் ஒன்றாக பிரச்சாரம்

சென்னை

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் முதன் முறையாக திமுக தலைவர் ஸ்டாலினும் ராகுல் காந்தியும் ஒரே மேடையில் ஒன்றாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். சேலத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் 14 தலைவர்களும் ஒரே மேடையில் பேசவுள்ளனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.6 அன்று நடக்கிறது. இதில் திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக், மமக, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் 14 கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. மநீம, அமமுக கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்துக் களம் காண்கிறது.

இந்தத் தேர்தலில் ஆரம்பத்திலிருந்தே திமுகவுக்கு ஆதரவான நிலை உள்ளது என்கிற கருத்து எழுந்தது. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே தலைவர்கள் பிரச்சாரத்தை தொடங்கினர். ராகுல் காந்தி மூன்று முறை தமிழகத்திற்கு வந்து பிரச்சாரம் செய்தார். பொதுமக்களுடன் நேரடியாக உரையாடல் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார். இவையெல்லாம் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

அதேபோல் திமுகவில் ஸ்டாலின் தூதுவர்கள் என உதயநிதி, கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, தமிழச்சி தங்கபாண்டியன், பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட 15 பேர் நவம்பர் மாதமே பிரச்சாரத்தைத் தொடங்கினர். ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என 187 தொகுதிகளுக்கும் மேல் பிரச்சாரத்தை முடித்தார்.

மறுபுறம் அதிமுக தரப்பில் ஒற்றை ஆளாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் பல தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். மத்தியிலிருந்து பாஜக தலைவர்கள் பிரதமர் மோடி, நட்டா, அமித் ஷா பலரும் தமிழகத்துக்கு வந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின் திருச்சியில் மார்ச் 7-ம் தேதி அன்று திமுக பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் நடத்தியது. இதில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன், மருத்துவர் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டு துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்துப் பேசினர்.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின் தேசியத் தலைவர்கள் யாரும் வந்து பிரம்மாண்டக் கூட்டம் எதையும் நடத்தவில்லை. தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய தமிழகம் வருகிறார். திமுக நடத்தும் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலினுடன் ராகுல் ஒரே மேடையில் பேசுகிறார்.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''வரும் மார்ச் 28 , ஞாயிற்றுக்கிழமை அன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை, சீலநாயக்கன்பட்டியில் பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநிலப் பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், கிறித்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், மக்கள் விடுதலைக் கட்சி முருகவேல்ராஜன் ஆகியோர் பேசவுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x