Published : 24 Mar 2021 10:13 AM
Last Updated : 24 Mar 2021 10:13 AM
தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை கொண்டுவந்து நுழைத்து, மத வெறியைத் தூண்ட நினைப்பவர்களுக்கு, நான் உறுதியோடு சொல்ல விரும்புவது, அது நடக்கவே நடக்காது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.
சேலம் வடக்கு தொகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இரும்பு நகரமாம் இந்த சேலத்திற்கு வந்திருக்கிறேன். வீரபாண்டியார் மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். இந்த சேலம் மாவட்டத்திற்கு நம்முடைய கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது இதுவரையில் எந்த மாவட்டத்திற்கும் செய்யாத சிறப்புகளை, சாதனைகளை இந்த மாவட்டத்திற்கு செய்திருக்கிறோம்.
இப்போது தமிழ்நாட்டில் ஒரு முதல்வர் இருக்கிறார். நான் இருக்கிறார் என்று தான் சொன்னேன். அவர் எப்படி முதல்வர் பதவிக்கு வந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அவர், “நான் படிப்படியாக வளர்ந்து வந்தேன்” என்று சொல்வார்.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை இப்போது முடக்கி வைத்து இருக்கிறார். அதுதான் கொடுமை.
தமிழ்நாட்டை மட்டுமல்ல சொந்த மாவட்டத்தையே இன்றைக்கு ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு முதல்வர் தான் இங்கு இருக்கும் பழனிசாமி அவர்கள். 10 வருடத்தில் எதையும் செய்யாத சாதிக்காத பழனிசாமி அவர்கள் இன்றைக்கு புதிதாக ஒரு பிரச்சினையை கிளப்பியிருக்கிறார்.
சமூகநீதியைப் பற்றி இப்போது பேசத் தொடங்கி இருக்கிறார். சமூகநீதி என்பது திராவிட இயக்கம் இந்த நாட்டிற்குக் கொடுத்த மிக முக்கியமான கொடை. அடக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் இன்றைக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் முன்னேறி இருக்கிறார்கள் என்றால் இடஒதுக்கீடு எனப்படும் சமூகநீதித் தத்துவம்தான் அதற்கு காரணம்.
அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் சமூக நீதி. அனைத்து சமூகங்களுக்கும் இடஒதுக்கீட்டை வழங்கிய ஆட்சிதான் தலைவர் கலைஞர் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 21 சதவிகித இடஒதுக்கீட்டை 31 சதவிகிதம் ஆக்கியது தி.மு.க! பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை 16 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் ஆக்கியது தி.மு.க! இந்த 18 சதவிகிதத்தில் பழங்குடியினரும் இருந்தார்கள். அவர்களுக்கு தனியாக 1 சதவிகிதம் வழங்கி, முழுமையாக 18 சதவீதமும் பட்டியலினத்தவருக்கு கிடைக்க வழி செய்தது தி.மு.க! பழங்குடியினருக்கு தனியாக 1 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க.
மதம் மாறிய ஆதிராவிட கிறிஸ்தவர்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது தி.மு.க! பிற்படுத்தப்பட்டவர்களில் 107 சாதியினருக்கு தனியாக 20 சதவிகிதமாக பிரித்து மிகப்பிற்படுத்தப்பட்டோர் என பெயரிட்டு ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க! கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கு கொண்டு வந்தது தி.மு.க! அருந்ததியர்க்கு 3 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க! இசுலாமியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்கியது தி.மு.க! பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை மண்டல் ஆணையப் பரிந்துரைப்படி மத்திய அரசுப் பணிகளிலும் மூலமாக பெற்றுத் தந்தது தி.மு.க.
மத்திய அரசுப் பணிகளில் உள்ள 27 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு காரணம் தி.மு.க. அனைத்துத் தமிழ் மக்களின் அரசாக - அனைத்து சமூகத்துக்கும் சரிவிகித நன்மை செய்யும் அரசாக - சமூகநீதி அரசாக செயல்பட்டதுதான் தி.மு.க. அரசு. எனவே உங்கள் அன்போடு ஆதரவோடு என்னுடைய தலைமையில் அடுத்து அமையவிருக்கும் திமுக அரசு தொடர்ந்து இதைத்தான் செய்யப் போகிறது.
தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை கொண்டுவந்து நுழைத்து, மத வெறியைத் தூண்ட நினைப்பவர்களுக்கு, நான் உறுதியோடு சொல்ல விரும்புவது, அது நடக்கவே நடக்காது.
இது திராவிட மண். தந்தை பெரியார் - அண்ணா - கலைஞர் பிறந்த மண் இந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது.
தமிழக மக்கள் வாக்களிக்கப் போவதற்கு முன்பு யோசித்துப் பார்க்க வேண்டும். இந்த அடிமை ஆட்சியை அகற்ற வேண்டும். டெல்லியில் இருப்பவர்கள் தமிழர்களை இழிச்சவாயர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்.
நடைபெறவிருக்கும் தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் தான். ஆனால் அதற்காக மட்டுமல்ல, இந்த தேர்தல் என்பது நம்முடைய சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் நடக்கின்ற தேர்தல் என்பதை .மறந்துவிடாதீர்கள்.
நம்முடைய தன்மானம் பாதுகாக்கப்பட வேண்டும். மாநில உரிமைகளை மீட்டிட வேண்டும். அதற்காகத்தான் இந்தத் தேர்தல் என்பதை நீங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
எனவே மாநில உரிமைகளை பாதுகாக்க, தொழில்துறை செழிக்க, சேலம் கழகத்தின் கோட்டை என்பதை நிரூபிக்க, இது வீரபாண்டியார் மாவட்டம் என்பதை மீண்டும் நிலை நிறுத்திக் காட்டிட, உதயசூரியனுக்கு – கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை மிகப்பெரிய அளவிற்கு வெற்றி பெற வையுங்கள் என்று கேட்கிறேன்.
இவ்வாறு உரையாற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT