Published : 24 Mar 2021 09:41 AM
Last Updated : 24 Mar 2021 09:41 AM

உங்கள் தந்தைக்கு இன்னும் அவமானத்தைத் தேடித் தராதீர்கள்: கார்த்தி சிதம்பரத்துக்கு குஷ்பு பதிலடி

சென்னை

தன்னைக் குறிப்பிட்டு கார்த்தி சிதம்பரம் தெரிவித்த கருத்துகளுக்குப் பதிலடிக் கொடுத்துள்ளார் பாஜக வேட்பாளர் குஷ்பு.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைதளம் வழியாகவும் இந்த ஆண்டுப் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஒருவருடைய கருத்துக்கு இன்னொருவர் எதிர்க்கருத்து பதிவிடுவதும் தொடர்கிறது.

அந்தவகையில், நேற்று (மார்ச் 23) மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாதவரம் தொகுதி வேட்பாளர் ரமேஷ் கொண்டல் சுவாமியைப் பேட்டி எடுத்ததாக அரசியல் விமர்சகர் குறிப்பிட்டார்.

அந்த ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக கார்த்தி சிதம்பரம் எம்.பி தனது ட்விட்டரில் சில பதிவுகளை வெளியிட்டார்.

அதில் அவர், "மக்கள் நீதி மய்யம் ஒரு நிலையான கட்சி அல்ல. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் எங்கே? அவர்கள் ஏன் இப்போது போட்டியிடவில்லை. வெற்றிபெறாத வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளுக்கு இன்றுவரை சென்று வந்து கொண்டிருக்கிறார்களா?

ரமேஷ் தோற்றால் மீண்டும் மாதவரம் தொகுதிக்குச் செல்வாரா? 2019 தேர்தலில் மக்கள் நீதி மையத்தைச் சேர்ந்த சினேகன் என்பவர் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார். அவர் தோற்ற பிறகு மீண்டும் தொகுதிக்குச் சென்றாரா?. மக்கள் நீதி மையம் போன்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தலின்போது மட்டும் ஒன்று கூடுவார்கள் அதன்பின் காணாமல் போவார்கள்.

கமல்ஹாசன், குஷ்பு போன்ற திரையுலகைச் சேர்ந்த பிரபல வேட்பாளர்கள் தவிர்க்க முடியாத அவர்களின் தோல்விக்குப் பிறகு அவரவர் தொகுதிக்குச் செல்லவே மாட்டார்கள். இது மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவருக்கும் பொருந்தும்"

இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருந்தார்.

இதில் மக்கள் நீதி மய்யம், கமல்ஹாசன், குஷ்பு உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளைக் குறிப்பிட்டே ட்வீட்களை வெளியிட்டிருந்தார்.

இந்த ட்வீட்களுக்கு பதிலடியாக ஆயிரம் விளக்குத் தொகுதியின் பாஜக வேட்பாளர் குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நண்பரே, நானும் கமல்ஹாசனும் எங்கள் தந்தையின் பெயரை வைத்துக்கொண்டு நடமாடவில்லை. அதை வைத்து நாங்கள் சாதிக்கவில்லை. வாழ்க்கையில் இந்த நிலைக்கு வரவில்லை.

எங்களால் சொந்தமாகக் கடினமாக உழைக்க முடியும். நாங்கள் இரண்டு மடங்கு உழைத்து எங்களை வெற்றி பெறச் செய்யும் மக்களுக்காக அதிகம் உழைப்போம்.

உங்கள் பாதுகாப்பின்மை சிந்தனையை உடைப்பதற்கு மன்னிக்கவும். உங்களைச் சுற்றியிருக்கும் நபர்கள், ஒரு குடும்பப் பெயரை வைத்து செல்வாக்கைக் காட்டுபவர்கள் உண்மைகளைச் சரியாகத் தெரிந்து கொள்ளட்டும்.

நானும் கமல்ஹாசனும் சொந்தமாக உழைத்து முன்னேறியவர்கள். எங்களது கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் திறமையும், நேர்மையும் மட்டுமே எங்களை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது. எனவே பொதுவில் உங்கள் பாதுகாப்பின்மை மனப்பான்மையைக் காட்டி உங்கள் தந்தைக்கு இன்னும் அவமானத்தைத் தேடித் தராதீர்கள்.

நான் திமுகவில் இருந்து காங்கிரசில் இருந்து தானாக வெளியேறவில்லை. யாரோ ஒருவரது மகனும், மேலும் அனைவரும் எனது இருப்பினால் பயப்பட ஆரம்பித்தார்கள். அதனால் நான் வெளியே தள்ளப்பட்டேன். என்னைப் பார்த்து நீங்கள் பயந்தால் அதற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது.

தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் மகன்களை விடத் தானாக முன்னேறிய ஒரு நபருக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகமாக இருக்கும் என்கிற காரணத்தினால் நீங்கள் இப்படி உணர்ந்திருக்கலாம்"

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x