Last Updated : 24 Mar, 2021 03:13 AM

 

Published : 24 Mar 2021 03:13 AM
Last Updated : 24 Mar 2021 03:13 AM

புதுவையில் இரு கூட்டணியிலும் உள் அரசியல்: தனித்து இயங்கும் வேட்பாளர்கள்

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அக்கட்சி ஒரு தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு, மற்றொரு தொகுதியில் சுயேச்சைக்கு ஆதரவு அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்த பலர் தேர்தலுக்கு முன்னரே பாஜக, என்.ஆர்.காங்கிரஸுக்கு சென்று விட்டனர்.

எதிர்புறம் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பாமகவுக்கு வாய்ப்பு தரவில்லை. தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே இருக்கும் சூழலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தரப்பில் முக்கியத் தலைவர்கள் யாரும் பிரச்சாரத்துக்கு வரவில்லை.

கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் அரசை திமுக கடுமையாக விமர்சித்து வந்தது. இரு தரப்புக்கும் இடையில் கடும் மோதல் போக்கு நிலவியது.

மீண்டும் கூட்டணி அமைந்தாலும், திமுக போட்டியிடும் தொகுதிகளில் காங்கிரஸாரும், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் திமுகவினரும் களப் பணியாற்றுவதில் ஒருங்கிணைப்பே இல்லை. பல வேட்பாளர்களும் இதை வெளிப்படையாகவே தெரிவிக்கின்றனர். இதுபற்றி கட்சித் தலைமயிடத்திலும் தெரிவித்து வருகின்றனர். வேட்பாளர்கள் தங்கள் சொந்த பலத்தை நம்பி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, தங்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் உள்ள முக்கியத் தலைவர்களை சந்தித்து தனியாக ஆதரவு கோரி வருகிறார். ரங்கசாமியின் பிரச்சாரத்தையே அவரது வேட்பாளர்கள் நம்பியுள்ளனர்.

அதிமுக தரப்பிலும் தனியாகவே பிரச்சாரம் செய்கின்றனர். கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் பாஜகவுடன் ஏற்பட்ட பிணக்கு இன்னும் தொடர்கிறது. அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் பாஜகவை சேர்த்து கொள்ளவில்லை. தமிழகத்தில் இருந்து அதிமுக தரப்பில் தலைவர்கள் பிரச்சாரத்துக்கு வர வாய்ப்புள்ள நிலையில், ரங்கசாமியை தங்கள் தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு வர கோரியுள்ளனர்.

இதற்கிடையே, பாஜக தாங்கள் போட்டியிடும் 9 தொகுதிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறது. பிரச்சாரத்துக்காக வெளி மாநிலத்திலிருந்து மத்திய அமைச்சர்கள் தொடங்கி, ஏராளமானோர் வருகின்றனர். வரும் நாட்களில் பிரதமர் மோடி தொடங்கி உள்துறை அமைச்சர், பல மாநில முதல்வர்கள் பிரச்சாரத்துக்கு வரவுள்ளதாக தெரிவிக்கின்றனர். அவர்கள் தொகுதிகளிலும் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக தரப்பில் இருந்து பெரிய அளவில் பங்களிப்பு இல்லை.

காங்கிரஸிலிருந்து பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் தங்கள் இருப்பை உறுதி செய்ய கூடுதலாக களத்தில் பணியாற்றுகின்றனர்.

இப்படியாக இரு கூட்டணியிலும் உள் அரசியலால் தங்களை, தங்கள் கட்சியை, தங்கள் ஆதரவாளர்களை மட்டுமே நம்பி அனைத்துக் கட்சியினரும் களத்தை எதிர் கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x