Published : 24 Mar 2021 03:13 AM
Last Updated : 24 Mar 2021 03:13 AM
போடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து நேற்று ஜி.கே. வாசன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் கரோனா காலங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியதை திமுக எதிர்த்தது. பொங்கல்பரிசாக ரூ. 2, 500 வழங்கியதையும் எதிர்த்தனர். இதுபோன்று பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கும்போதெல்லாம் திமுகவினர் இடையூறு செய்துகொண்டே இருந்தனர். இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகளை பேசாமல் தொடர்ந்து வெளிநடப்பு செய்தனர். எனவே முதல்வர் மற்றும்துணை முதல்வர் பற்றி பேசி திமுகவினருக்குத் தகுதி இல்லை.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது திட்டங்கள் அனைத்தையும் இந்த அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. மகளிருக்கான திட்டங்களில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோதும், துணை முதல்வராக இருந்தபோதும் மக்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார். ஆகவே, தமிழகத்திலேயே அதிக வாக்குவித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். நாட்டுக்கு நல்லது செய்பவர்களை தடுக்கும் கூட்டணி திமுக கூட்டணி.
அதிமுக மாநிலத்தை வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்கிறது. ஆனால், திமுக தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கப் பார்த்தது. இவ்வாறு அவர் பேசினார். பிரச்சாரத்தின்போது, ப.ரவீந்திரநாத் எம்.பி. உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஜி.கே. வாசன் அடுக்கடுக்காக அதிமுக அரசை புகழ்ந்து தள்ளியதை பார்த்த கட்சியினர், அவர் அதிமுக தலைமைக் கழக பேச்சாளர்களையே விஞ்சி விட்டதாக சிலாகித்துக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT