Published : 24 Mar 2021 03:13 AM
Last Updated : 24 Mar 2021 03:13 AM
தமிழக அரசின் திறமையின்மையே அரசின் கடன் சுமை அதிகரிக்கக் காரணம் என திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி தெரிவித்தார். திருச்சி மாவட்டத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வந்த அவர் ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
தேர்தலில் மக்களின் எண்ண ஓட்டம் எப்படி உள்ளது?
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் தமிழகம் முழுவதும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ரேஷன் விநியோகத்தில் குளறுபடி, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, காஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி குளறுபடி ஆகியவற்றால் ஏற்பட்ட வேலையிழப்பு, தொழில் பாதிப்பு, ஊதியம் குறைப்பு என மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
தமிழக அரசின் திறமையின்மை, நிதி நிர்வாகத்தை சரி வரச் செய்யாததே இந்த அளவுக்கு கடன் சுமை அதிகரிக்க காரணம். உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழில் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவற்றை செய்ய அதிமுக அரசு தவறிவிட்டது.
அரசின் கடன் சுமை அதிகமாக உள்ள நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்த இயலுமா?
மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை தான் நாங்கள் அறிவித்திருக்கிறோம். கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓராண்டாக மக்கள் பெரும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அளிக்கப்படும் திட்டங்கள் இலவசம் என்றாலும் அது அவசியமானது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நிதி நிர்வாகம் சீரமைக்கப்படும். இதனால் கடன் சுமை படிப்படியாக குறையும்.
பெண்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராடும் நீங்கள், இந்த தேர்தலில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்துள்ளீர்களா?
பெண்களுக்கென தேர்வு செய்யப்பட்ட தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. பெண்களை வேட்பாளர்களாக தேர்வு செய்வது எளிதானதாக இல்லை. இன்றும் பெண்களை அரசியலுக்குள் கொண்டு வருவது பெரும் சவாலாகத்தான் உள்ளது. திமுக மட்டுமல்ல அனைத்துக் கட்சிகளுக்கும் இதே நிலைதான். பெண்களுக்கு அதிக அளவில் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இருப்பினும் பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டமாகும்போது இது சுலபமாக இருக்கும்.
கட்சிக்கு உதயநிதியின் வருகையால் திமுக மீண்டும் வாரிசு அரசியலை முன்னெடுக்கிறதா?
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களை ஏற்றுக் கொள்வதும், நிராகரிப்பதும் மக்கள்தான்.
கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் வழங்க கடுமை காட்டப்பட்ட நிலையில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
அனைத்துக் கட்சிகளுமே அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என நினைப்பது இயல்பு தான். ஆனால், இருக்கும் தொகுதிகளை எவ்வாறு பிரித்துக் கொள்வது என்பது தான் முக்கியமானது. திமுக கூட்டணி இயற்கையானது. கருத்து வேறுபாடுகள் இல்லை. அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்றி வருகிறோம். திமுக கூட்டணிக்கு 180 -190 இடங்கள் கிடைக்கும்.
இந்த தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுவதை எப்படிப் பார்க்கிறீர்கள் ?
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையுடன் அரசியல் களத்தில் உள்ளனர். யாரையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. திமுகவின் வெற்றியை இது பாதிக்காது. தேர்தல் களத்தில் திமுக- அதிமுக இடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது. கட்சிகளையும் தாண்டி சுதந்திரமான, நல்ல ஆட்சி தேவை என நினைப்பவர்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றியிருக்கும் போதே ஸ்டாலினுக்கு தலைவர் பதவியை அவர் தரவில்லை என முதல்வர் பழனிசாமி பேசி வருகிறாரே?
தலைவர் கருணாநிதி இருக்கும் போதே ஸ்டாலின் செயல் தலைவராகவும், துணை முதல்வராகவும் இருந்துள்ளார். பேராசிரியரும் அடுத்து ஸ்டாலின் தான் தலைவராக வர வேண்டும் கருணாநிதி இருக்கும் போதே கூறினார். வரலாறு தெரியாமல் முதல்வர் பேசி வருகிறார்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
அதிமுக அரசை இயக்குவது பாஜக தான். தமிழகத்தின் முடிவுகள் தமிழகத்தில் தான் எடுக்கப்பட வேண்டும். குடியுரிமை சட்டம், முத்தலாக் சட்டம், வேளாண்மை சட்டம் ஆகியவற்றுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தது அதிமுக. ஆனால், தேர்தல் அறிக்கையில் இந்த சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் என அதிமுக தெரிவித்துள்ளது. இது தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றும் செயல். உறுதியான, ஸ்திரமான கொள்கைகள் எதுவும் அதிமுகவுக்கு கிடையாது.
கடந்த தேர்தலில் பூரண மதுவிலக்கை பிரதான வாக்குறுதியாக அளித்த திமுக, இந்தத் தேர்தலில் அதுபற்றி எதுவும் கூறவில்லையே?
தற்போது மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியாது. மது அருந்துவோர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்கள், அமைப்புகளை ஏற்படுத்திய பின்னர் தான் மதுவிலக்கை அமல்படுத்த முடியும். திமுக ஆட்சி அமைந்த பின்னர் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டு, இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT