Published : 24 Mar 2021 03:14 AM
Last Updated : 24 Mar 2021 03:14 AM
கோவை-பொள்ளாச்சி சாலையை மையப்படுத்தி அமைந்துள்ள தொகுதி கிணத்துக்கடவு. சிட்கோ, மலுமிச்சம்பட்டியில் தொழிற்பேட்டை வளாகங்கள் அமைந்துள்ளன. தொகுதிக்குள் ஏராளமான தனியார் கல்விநிலை யங்கள் உள்ளன. கிராமங்களில் கால்நடை வளர்ப்பு, விவசாயத்தை மக்கள் அதிகளவில் நம்பியுள்ள னர். ஏராளமான கிராமப்பகுதிகள் இருந்தாலும், மாநகராட்சியின் 7 வார்டுகள் தொகுதியில் அடங்கியுள்ளன. கவுண்டர், ஒக்கலிக கவுடர், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக இதர சமூக மக்கள் வசிக்கின்றனர்.
தக்காளி, கத்தரி, வெண்டை, நிலக்கடலை, சோளம், காய்கறிகள் சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. எனவே, வேளாண் விளைபொருட்களுக்கு நிலையான விலைகிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தக்காளியை பதப்படுத்த குளிர்பதன கிடங்குகளை அமைத்துத்தர வேண்டும்.
மதுக்கரை அருகே அறிவொளி நகர் மலைப்பகுதியில் உருவாகி கேரள எல்லையான வேலந்தாவளம் வரை செல்லும் மஞ்சப்பள்ளம் ஆற்றில் கூடுதல் தடுப்பணைகளை கட்ட வேண்டும். ஆற்றில் கழிவுநீர் கலப்பை தடுக்க வேண்டும் என்பவை விவசாயி களின் கோரிக்கையாக உள்ளது.
முக்கிய பிரச்சினைகள்
வெள்ளலூரில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தேங்கியுள்ள பல லட்சம் டன் குப்பையால் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது.
கிடங்குக்கு வரும் குப்பையின் அளவைக் குறைக்க, குப்பையை தரம் பிரித்து சேகரிக்கும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப் படவில்லை.
நீண்ட இழுபறிக்குப் பிறகு தொடங்கியுள்ள குப்பையை அழிக்கும் ‘பயோ-மைனிங்’ திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்.
குப்பைக் கிடங்கில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்தால் ஏற்படும் புகையாலும், குப்பையிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தாலும் சுற்றுவட்டார மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகிவருகின்றனர். கேரள எல்லையையொட்டி அமைந்துள்ள தொகுதி என்பதால், அங்கிருந்து கொண்டுவரப்படும் குப்பை, மருத்துவ கழிவுகளை தடுக்கவும் நடவடிக்கை தேவை. கற்பகம் கல்லூரி அருகே எல் அண்டு டி பைபாஸ் சாலை, பொள்ளாச்சி சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, அங்கு மேம்பாலம் அவசியம் அல்லது விபத்தை தடுக்க மாற்று வழிகளை செயல்படுத்த வேண்டும் என்பவை மக்களின் முக்கிய கோரிக்கை களாகும்.
சிட்கோ தொழிற்பேட்டையில் 7 ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லை. சாலைகளும் மோசமாக உள்ளன. தெருவிளக்குகளை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழில் முனைவோர் எதிர்பார்க்கின்றனர்.
தொகுதியில் உள்ள பகுதிகள்
மாநகராட்சி பகுதிகளான வெள்ளலூர், இடையர்பாளையம், ஈச்சனாரி, சுந்தராபுரம், குறிச்சி, போத்தனூர் பகுதிகளும், மாதம் பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம், மாவுத்தம் பதி, மைலேரிபாளையம், நாச்சி பாளையம், அரிசிபாளையம், வழுக்குப்பாறை உள்ளிட்ட கிராமங்களும், மதுக்கரை, எட்டிமடை, திருமலையம் பாளையம், ஒத்தக்கால்மண்டபம், செட்டி பாளையம், கிணத்துக்கடவு பேரூராட்சிகளும் இந்த தொகுதி யில் அடங்கியுள்ளன.
களம் காணும் வேட்பாளர்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல் களில் திமுக 4 முறையும், அதிமுக 8 முறையும் வெற்றிபெற்றுள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அ.சண்முகம் 89,042 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
திமுக சார்பில் குறிச்சி பிரபாகரன் 87,710 வாக்குகள் பெற்று, 1,332 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். பாஜக சார்பில் முத்துராமலிங்கம் 11,354 வாக்குகள், மதிமுக சார்பில் ஈஸ்வரன் 8,387 வாக்குகள் பெற்றனர்.
இந்தமுறை திமுக சார்பில் குறிச்சி பிரபாகரன் மீண்டும் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் செ.தாமோ தரன் போட்டியிடுகிறார். 2001 முதல் 2016 வரை தொடர்ந்து 3 முறை அவர் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
இதுதவிர, மக்கள் நீதி மய்யம் சார்பில் சிட்கோ சிவா, அமமுக சார்பில் மா.ப.ரோகிணி, நாம் தமிழர் கட்சி சார்பில் உமாஜெகதீஸ் ஆகியோர் களத்தில்உள்ளனர். கடந்தமுறை கைவசமாகாத வெற்றியை எட்டிப்பிடிக்க திமுகவினரும், அதிக முறை வென்ற தொகுதியை மீண்டும் தக்கவைக்கும் முனைப்பில் அதிமுக வினரும் தீவிரம் காட்டுவதால் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
போத்தனூரில் புதிய ரயில் முனையம்?
சென்னை நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் என மூன்று ரயில் முனையங்கள் உள்ளன. இதனால், இடநெருக்கடி குறைவதோடு, கூடுதல் ரயில்களை இயக்க முடிகிறது. அதேபோன்று, கோவை ரயில்நிலையத்தை மட்டும் நம்பி இருக்காமல், கூடுதலாக பல்வேறு இடங்களுக்கு ரயில்களை இயக்க போத்தனூர் ரயில்நிலையத்தை மேம்படுத்தி புதிய ரயில் முனையத்தை உருவாக்க வேண்டும். மேலும், கோவை-பொள்ளாச்சி வழித்தடத்தில் செட்டிபாளையத்தில் ரயில் நிலையம் அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT