Published : 24 Mar 2021 03:16 AM
Last Updated : 24 Mar 2021 03:16 AM
வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ளதால், வைகுண்டம் சட்டப்பேரவை தொகுதி முழுவதும் விவசாயத் தொழிலே பிரதானம். நெல், வாழை அதிகம் பயிராகின்றனர். செங்கல் உற்பத்தி, கல்குவாரி தொழில்களும் இங்கு உள்ளன. பிரசித்தி பெற்ற நவதிருப்பதி கோயில்கள் இத்தொகுதியில்தான் அமைந்துள்ளன.
மறு சீரமைப்புக்கு பிறகு சாத்தான்குளம் வரை இத்தொகுதி நீண்டுள்ளது. வைகுண்டம், ஏரல், சாத்தான்குளம் ஆகிய 3 வட்டங்களை உள்ளடக்கிய இத்தொகுதியில், நாடார்சமுதாய மக்கள் சுமார் 40 சதவீதம் பேர்வசிக்கின்றனர். அடுத்தாக தேவர் சமூகத்தினர் அதிகம்.
வேளாண் பிரச்சினைகள்
விவசாயிகளை அதிகம் கொண்ட தொகுதிஎன்பதால் இங்குள்ள முக்கியப் பிரச்சினைகளும் விவசாயம் சார்ந்தே உள்ளன. இப்பகுதியில் அதிகம் விளைவிக்கப்படும் வாழைத்தார்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனைப்படுகின்றனர். வாழைக்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் ஆலை அமைக்க வேண்டும். குளிர்ப்பதனக் கிடங்குகள் அமைக்க வேண்டும். தாமிரபரணியில் மணல்கொள்ளையைத் தடுக்க வேண்டும் போன்றவை இத்தொகுதி மக்களின் பிரதான கோரிக்கைகள்.
ஸ்ரீவைகுண்டம் வாரச்சந்தை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். தாமிரபரணி ஆற்றில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் படகு குழாம் அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்யவேண்டும். கருங்குளத்தில் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் ஐடிஐ தொடங்க வேண்டும். நவதிருப்பதி கோயில்களில் தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் பிற கோரிக்கைகள்.
7 முறை காங்கிரஸ் வெற்றி
1957-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 15 தேர்தல்களில் 7 முறை காங்கிரஸ் கட்சியும்,5 முறை அதிமுகவும், 3 முறை திமுகவும் வெற்றிபெற்றுள்ளன. 1957, 1962 தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் ஏ.பி.சி.வீரபாகு, 1967, 1971 தேர்தல்களில் திமுக சார்பில் சி.பா.ஆதித்தனார் வென்றுள்ளனர்.
கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.பி.சண்முகநாதன் 3,531 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 65,198 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராணி வெங்கடேசன் 61,667 வாக்குகளை பெற்றார். பாஜகசார்பில் போட்டியிட்ட பி.செல்வராஜ் 9,582 வாக்குகளையும், தமாகா சார்பில் போட்டியிட்ட எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 6,203 வாக்குகளையும், அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் போட்டியிட்ட எஸ்.முத்துராமலிங்கம் 3,764 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பே.சுப்பையா பாண்டியன் 2,113வாக்குகளையும், பாமக வேட்பாளர் ஜி.லிங்கராஜ் 806 வாக்குகளையும் பெற்றனர்.
சாதக- பாதகங்கள்
தற்போது அதிமுக சார்பில் எஸ்.பி.சண்முகநாதன் மீண்டும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், அமமுக சார்பில் எஸ்.ரமேஷ், மக்கள் நீதிமய்யம் சார்பில் ஆர்.சந்திரசேகர், நாம் தமிழர்கட்சி சார்பில் பே.சுப்பையா பாண்டியன் உள்ளிட்ட 21 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். அதிமுக - காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
சண்முகநாதன் ஏற்கெனவே இந்த தொகுதியில் 2001, 2011, 2016 தேர்தல்களில் வெற்றிபெற்றவர். தற்போது நான்காவது முறையாகவெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் கடும் பணியாற்றி வருகிறார். உள்ளூர்வாசி, எப்போதும் அணுகலாம் என்பது அவருக்கு சாதகமான அம்சங்கள். தொகுதி முழுவதும் குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளார். மேலும், கடந்தமுறை தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை வாங்கிய பாஜக, தமாகா ஆகியகட்சிகள் கூட்டணியில் இருப்பது அவருக்கு பலம். எனினும், மூன்று முறை வென்றபோதும் பெரிய அளவிலான வளர்ச்சி திட்டங்களை தொகுதிக்கு கொண்டுவரவில்லை என்பது மக்களின் பெரும் குறையாக உள்ளது.
வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10 சதவீத உள்இடஒதுக்கீடு இத்தொகுதியில் கணிசமாக இருக்கும் தேவர் இன மக்கள் மத்தியிலும், சாத்தான்குளம் சம்பவம்அப்பகுதியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர் அமிர்தராஜ், முன்னாள் எம்எல்ஏ ஊர்வசி செல்வராஜின் மகன். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். குறிப்பாக தொகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களுக்கு தனது பொறியியல் கல்லூரியில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இலவசமாக இடம் கொடுக்கிறார். இதுவும், திமுக கூட்டணி கட்சிகளும் அவருக்கு பலம் சேர்க்கின்றன.
அதேநேரத்தில், அவர் வெளியூர்காரர் என்ற கருத்து தொகுதி மக்கள் மத்தியில் இருக்கிறது. அமிர்தராஜ் நடத்தும் தொழில்கள் அனைத்தும் சென்னை சார்ந்தே இருக்கின்றன. எனவே, தொகுதி மக்கள் அவரை சந்திப்பதில் சிரமம் இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
காங்கிரஸ், அதிமுக, திமுக என அனைத்து கட்சிகளையும் வெற்றிபெற வைத்த வைகுண்டம் தொகுதி இன்னும் வளராமலே இருப்பதுதான் வேதனை.
இதுவரை வென்றவர்கள்ஆண்டு வேட்பாளர் கட்சி1957 ஏ.பி.சி வீரபாகு காங்கிரஸ்1962 ஏ.பி.சி. வீரபாகு காங்கிரஸ்1967 சி.பா. ஆதித்தனார் தி.மு.க.1971 சி.பா. ஆதித்தனார் தி.மு.க.1977 சாது செல்வராஜ் அ.தி.மு.க.1980 ராமசுப்பிரமணியன் அ.தி.மு.க.1984 டேனியல் ராஜ் காங்கிரஸ்1989 டேனியல் ராஜ் காங்கிரஸ்1991 டேனியல் ராஜ் காங்கிரஸ்1996 டேவிட் செல்வன் தி.மு.க.2001 சண்முகநாதன் அ.தி.மு.க.2006 ஊர்வசி செல்வராஜ் காங்கிரஸ்2009 சுடலையாண்டி காங்கிரஸ்2011 சண்முகநாதன் அ.தி.மு.க.2016 சண்முகநாதன் அ.தி.மு.க.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT