Published : 23 Mar 2021 07:44 PM
Last Updated : 23 Mar 2021 07:44 PM

சட்டப்பேரவைத் தேர்தல்: சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு 5 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என, போக்குவரத்துத் துறைச் செயலாளர் சமயமூர்த்தி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, போக்குவரத்துத் துறை இன்று (மார்ச் 23) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"2021ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் தங்க சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்பான முறையில் சென்று வாக்களிக்க ஏதுவாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், சிறப்புப் பேருந்துகள் இயக்கம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டமானது, போக்குவரத்துத் துறைச் செயலாளர் சமயமூர்த்தி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய துறைகளின் அலுவலர்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், போக்குவரத்துத் துறைச் செயலாளர் தமது தலைமை உரையில், வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் நாள் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்குப் பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொண்டு வாக்களித்துத் திரும்பிட ஏதுவாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கமானது பின்வரும் அட்டவணையில் கண்டுள்ளவாறு இயக்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 01.04.2021 முதல் 05.04.2021 வரையிலான 5 நாட்களுக்கு சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 3,090 பேருந்துகள் என ஆக மொத்தம் 14 ஆயிரத்து 215 பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்படுகிறன. மேலும், கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

மேகுறிப்பிட்டுள்ள 5 நாட்களில் 01.04.2021 முதல் 03.04.2021 வரையில், நாள்தோறும் இயக்கப்படுகிற பேருந்துகள் மறும் சிறப்புப் பேருந்துகள் கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். குறிப்பாக, விடுமுறை நாளான ஞாயிறு (04.04.2021) மற்றும் திங்கட்கிழமை (05.04.2021) ஆகிய இரு நாட்களுக்கு மட்டும் இயக்கப்படுகிற பேருந்துகள், பண்டிகை நாட்களான பொங்கல் மற்றும் தீபாவளி நாட்களில் இயக்கப்பட்டது போன்று, பின்வரும் அட்டவணையில் கண்டுள்ள இடங்களிலிருந்து இயக்கப்படுகிறன.

சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

(04.04.2021 மறும் 05.04.2021)

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னையிலிருந்து பின்வரும் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறன.

மேலும், சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 06.04.2021 முதல் 07.04.2021 வரை தினசரி இயக்கப்படுகிற 2,225 பேருந்துகளுடன் 2,115 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், சேலம், மதுரை, திருச்சி, தேனி ஆகிய இடங்களிலிருந்து திருப்பூர் மற்றும் கோயம்புத்தூருக்கும், சேலம், திருண்ணாமலை, வேலூர் ஆகிய இடங்களிலிருந்து பெங்களூருக்கும் என மொத்தம் 1,738 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறன.

இயக்கப்படுகிற சிறப்புப் பேருந்துகள் அனைத்தும், தமிழ்நாடு அரசு விதித்துள கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளான, பேருந்துகளை அவ்வப்போது கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்தல், கட்டாய முகக்கவசம் அணிதல், பயணிகள் உடல் வெப்ப நிலையை வெப்பமானி மூலம் பரிசோதனை செய்தல், கிருமிநாசினி மூலம் கைகளைச் சுத்தம் செய்தல் உள்ளிட்டவறைப் பின்பற்றியே பேருந்துகள் இயக்கப்படும். இதனைப் பயணம் மேற்கொள்ள வரும் பொதுமக்களும் தவறாது பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவு வசதி

சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்கிற பொதுமக்கள், கடைசி நேரக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, இணையதள வசதியான www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி ஆகியவற்றின் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செய்யப்படும் முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பொதுமக்கள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தினைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து கொண்டு பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் பின்பற்றிப் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x