Published : 23 Mar 2021 07:18 PM
Last Updated : 23 Mar 2021 07:18 PM
"எங்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம்; மதுக்கடையை அகற்றினால் போதும்," என சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிரச்சாரத்திற்கு சென்ற பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவிடம் கிராமப் பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.
பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா காரைக்குடி அருகே நென்மேனி, அண்டக்குடி, செங்கத்தான்குடி, மிதிராவயல், சிறுகவயல், பனம்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று பிரச்சாரம் செய்தார்.
அவர் பனம்பட்டியில் பிரச்சாரம் செய்தபோது, அங்கிருந்த பெண்கள், ‘எங்கள் பகுதியில் உள்ள மதுக்கடையால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆண்கள் தினமும் குடித்துவிட்டு வந்து பெண்கள், குழந்தைகளை அடிக்கின்றனர்.
இதனால் பலகட்ட போராட்டம் நடத்தி மதுக்கடையை அகற்றினோம். அதன்பிறகு மீண்டும் அதே இடத்தில் மதுக்கடையை வைத்துவிட்டனர். எங்களுக்கு நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். மதுக்கடையை அகற்றினால் போதும்,’’ எனக் கூறி கண்ணீர்விட்டனர்.
இதையடுத்து மதுக்கடையை அகற்ற உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக ஹெச்.ராஜா தெரிவித்தார்.
மேலும் பிரச்சாரத்தின்போது ஹெச்.ராஜா பேசியதாவது:
வீடு இல்லாதவர்கள் யாரும் இருக்கக் கூடாது என்பதற்காக பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் தமிழகத்தில் 12 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.
பெண்கள் கவுரமாக இருக்க நாடு முழுவதும் 11 கோடி கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. விறகு அடுப்பில் சமைப்பதால் புற்றுநோய் உருவாகும். அதற்காக தான் சமையல் எரிவாயு இணைப்பு கொடுத்துள்ளோம்.
மேலும் இந்தத் தேர்தல் அறிக்கையில் 6 சிலிண்டர் இலவசமாக தருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். பெண்களின் ஆரோக்கியத்தைக் காப்பதில் பிரதமரும், முதல்வரும் முனைப்பாக உள்ளனர், என்று பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT