Published : 23 Mar 2021 06:22 PM
Last Updated : 23 Mar 2021 06:22 PM
வரி வருவாயை அதிகரித்துத் தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் எம்.சி.சம்பத் இன்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:
''எங்களின் கூட்டணி வலிமையாக இருக்கிறது. அரசின் திட்டங்கள் கூடுதல் பலத்தை அளித்துள்ளன. எங்கள் தேர்தல் அறிக்கைதான் சூப்பர். ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள், மாதந்தோறும் ரூ.1,500, சோலார் அடுப்பு, வாஷிங் மெஷின் எனப் பெண்கள் அனைவருக்கும் உகந்த திட்டங்களை முன்மொழிந்துள்ளோம்.
எங்களால் இவற்றை வழங்கமுடியாது என்று எதிர்க் கட்சிகள் எங்களைக் குற்றம் சாட்டுவது வழக்கம்தான். மேற்குறிப்பிட்ட நலத்திட்டங்களை வழங்க, வரி வருவாயைக் கூட்டுவோம். வணிகத் துறை, தொழில், போக்குவரத்து, டாஸ்மாக் ஆகிய துறைகளில் வரியை அதிகரித்து, திட்டங்களை நிறைவேற்றுவோம்.
பல்வேறு துறை வல்லுநர்களைக் கலந்தாலோசித்து, விவாதித்து, நிதித் துறைச் செயலாளரைச் சந்தித்துப் பேசித்தான் இந்தத் திட்டங்களையே அறிவித்துள்ளோம். பின்பு எப்படிக் கொடுக்காமல் இருப்போம்? எதிர்க் கட்சியினர் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அப்படிப் பேசுகின்றனர்.
எங்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களைப் பிடிப்போம். வடக்கு மண்டலத்திலும் வலுவாக உள்ளோம். தெற்கு மண்டலத்தில் இருந்து நிறைவான கருத்துகளைப் பெற முடிகிறது. 200க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றுவோம்''.
இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
கடலூர் தொகுதியில் அதிமுக சார்பில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT