Published : 23 Mar 2021 05:58 PM
Last Updated : 23 Mar 2021 05:58 PM

என் சொத்துகள் அனைத்தும் மக்கள் அளித்த சம்பளம்; நான் அரசியலுக்கு வந்ததால் ஆண்டுக்கு ரூ.300 கோடி நஷ்டம்: கமல் பேச்சு

பிரச்சாரத்தில் பேசிய கமல்.

மயிலாடுதுறை

கிராமசபைக் கூட்டங்களுக்குச் சென்று தீர்மானங்கள் நிறைவேற்றினால் உங்கள் பகுதி வளர்ச்சி அடையும் என்று, தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

மயிலாடுதுறை சின்னகடைத் தெருவில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (மார்ச் 23) தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் ரவிச்சந்திரன், கூட்டணிக் கட்சியான சமத்துவ மக்கள் கட்சியின் சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் பிரபு, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் மெகராஜ்தீன் ஆகியோருக்கு வாக்குச் சேகரித்துப் பேசியதாவது:

"முதல்வர் பழனிசாமி ரூ.10 லட்சம் கோடி ஊழல் செய்ததாக ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலின் ரூ.20 லட்சம் கோடி ஊழல் செய்ததாக பழனிசாமி கூறுகிறார். மாறி மாறிக் குறை சொல்லி கொண்டிருக்கிறார்களே தவிர, தவறு செய்யவில்லை என்று யாரும் கூறவில்லை. இதனால் 30 லட்சம் கோடி மக்களின் வரிப்பணம்தான் காணாமல் போய் உள்ளது.

ஊழல் செய்தவர்கள் உள்ளே போனாலும் சிறையில் இருந்து ஷாப்பிங் போகிற அளவுக்கு நமது சட்டத்தில் ஓட்டைகள் உள்ளன. தலைமை நேர்மையாக இருந்தால்தான் மக்களுக்கு நல்லது நடக்கும்.

கமலுக்கு இவ்வளவு கோடி சொத்துகளா என்று கேட்கிறார்கள். ஆம், நீங்கள் கொடுத்ததுதான். நடிகராக இருந்தபோது மக்கள் அளித்த சம்பளம். நான் அரசியலுக்கு வந்ததால் ஆண்டுக்கு ரூ.300 கோடி நஷ்டம்தான். ஆனால், அதை நான் பொருட்படுத்தவில்லை. மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்துதான் அரசியலுக்கு வந்தேன். இதுவரை சினிமா நட்சத்திரமாக இருந்த நான், இனி உங்கள் வீட்டில் சிறு விளக்காக இருப்பேன்.

தமிழக இளைஞர்கள் வேலை தேடும் பட்டதாரிகளாக இல்லாமல் வேலை கொடுக்கும் முதலாளிகளாக உருவாக வேண்டும். மக்களால் தகர்க்க முடியாத கோட்டை என்று எதுவுமில்லை. ஜனநாயகம் கோட்டையல்ல. மக்கள் வாழும் இடம்.

மக்கள் விழிப்புணர்வுடன் கேள்வி கேட்டால் பொறுப்பில் இருப்பவர்கள் தவறு செய்ய அஞ்சுவார்கள். கிராமசபைக் கூட்டத்தில் எடுக்கும் தீர்மானத்தை உச்ச நீதிமன்றம் கேட்கும். இங்கு வந்துள்ளதுபோல் மக்கள், கிராமசபைக் கூட்டங்களுக்குச் சென்று கேள்வி கேட்டு தீர்மானங்கள் நிறைவேற்றினால், உங்கள் பகுதி நிச்சயமாக வளர்ச்சி அடையும்".

இவ்வாறு கமல் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x