Published : 23 Mar 2021 04:59 PM
Last Updated : 23 Mar 2021 04:59 PM
அதிமுக - பாஜக அணியினர் ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகள் துணையோடு பண விநியோகத்தில் ஈடுபடவுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. பண விநியோகத்தில் ஈடுபடுபவர்கள் நிச்சயம் பிடிபடுவார்கள். அவர்கள் யார் என்பது அப்போது தெரியவரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகள், சில ஆய்வுகள் திமுக தலைமையிலான அணி வெற்றிபெறும் எனத் தெரிவிக்கின்றன.
இது சட்டப்பேரவைத் தேர்தலில் பளிச்சென தெரியும்.
நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியை விட அதிகமான இடங்களில் திமுக தலைமையிலான அணி வெற்றி பெறும். அதிமுக - பாஜக தலைமையிலான அணி ஒப்பந்ததாரர்கள், சில அரசு அதிகாரிகள் துணையோடு பண விநியோகத்தில் ஈடுபடவுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. பண விநியோகத்தில் ஈடுபடுபவர்கள் நிச்சயம் பிடிபடுவார்கள். அவர்கள் யார், யார் என்பது அப்போது தெரியவரும்.
தமிழகத்தில் ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் உணர்வுகளை மதிக்காமல் பாஜக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பொதுத்துறையே இருக்கக்கூடாது என மோடி கூறுகிறார். மதுரை விமான நிலையம், திருச்சிராப்பள்ளி விமான நிலையம் உள்ளிட்ட 11 விமான நிலையங்களை விற்பதற்கு பாஜக முயற்சித்து வருகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்கள், கோயில் நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை தனியாரிடம் கொடுக்கப்போவதாக பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களை தாரைவார்ப்பது போல் அறநிலையத்துறையின் சொத்துக்களை நாசுக்காக ஆன்றோர்கள், சான்றோர்களிடம் ஒப்படைப்போம் என்கிறது. யார் அந்த ஆன்றோர்கள், சான்றோர்கள். இவர்களுக்கு என்ன அளவுகோல்? இவர்களைக் கண்காணிப்பது யார்? என்பதற்கெல்லாம் பதில் இல்லை.
தேர்தல் ஆணையம் வாக்கு செலுத்தும் இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர், சின்னங்களை பதிவு செய்யும் போதே வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அறிந்து கொள்ளும் இயந்திரத்தின் பணியையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டும், இந்தப் பணியை இருவேறு காலத்தில் செய்தால் முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது.
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். தேர்தல் ஆணையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
மேலும், அவர் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதுதான் சரியான நடைமுறை. இதற்கு மாறாக, மாற்றுத்திறனாளிகளை கட்டாயப்படுத்தி தபால் வாக்கு பதிவிற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தருமாறு கூறுவது பொருத்தமான நடவடிக்கையல்ல.
அதிமுக தேர்தலில் வெற்றி பெற்றால் 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்குவோம் எனக்கூறி சிலிண்டர் படங்களுடன் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இவர்கள் ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 2 சிலிண்டர்களையாவது இலவசமாக வழங்கியிருக்கலாம். சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்திருக்கலாம். இதைச் செய்யாமல் 6 சிலிண்டர்கள் இலவசம் என்பது ஒரு ஏமாற்று வேலை.
தற்போது சிலிண்டர் விலை ரூ.900-க்கு விற்கப்படுகிறது. அதிமுகவின் சிலிண்டர் பிரச்சாரத்தை பார்க்கும் பெண்கள் இதன் விலை உயர்வை நினைத்து கண்ணீர் வடிக்கிறார்கள்.
அதிமுக அரசு கடந்தகாலங்களில் மாணவர்களுக்கு இலவசமாக செல்போன் வழங்குவோம். வை-பை வசதி செய்து தருவோம். 10 லட்சம் வீடுகள் கட்டித்தருவோம் என்றெல்லாம் வாக்குறுதி அளித்தது.
இவற்றை நிறைவேற்றாமல் தற்போது புதிய வாக்குறுதிகளை அளித்து பிரச்சாரம் செய்கிறது. இதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றார்.
பேட்டியின் போது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் ரா.விஜயராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT