Published : 23 Mar 2021 04:34 PM
Last Updated : 23 Mar 2021 04:34 PM
காரைக்காலில் இதுவரை முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளாத நிலையில், தொடக்கம் முதலே பாஜக படு வேகமாக செயல்பட்டு வருகிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குட்பட்ட காரைக்கால் பிராந்தியத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், இந்த 5 தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், அமமுக, நாம் தமிழர், தேமுதிக, மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இவற்றுள் பாஜக, நாம் தமிழர் கட்சிகளை தவிர மற்றக் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களோ, நட்சத்திரப் பேச்சாளர்களோ இதுவரை காரைக்காலில் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.
கடந்த பிப்.26-ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பிருந்தே பாஜகவின் தேசிய பொறுப்பாளர்கள் காரைக்காலில் மையம் கொண்டிருந்தனர். கடந்த பிப்.28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காரைக்காலில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.
மத்திய இணை அமைச்சரும், புதுச்சேரி மாநிலத்துக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அர்ஜூன் ராம் மேக்வால், புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, மாநிலங்களவை உறுப்பினரும் தேர்தல் இணை பொறுப்பாளருமான ராஜிவ் சந்திரசேகர், அண்மையில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சரும், பாஜகவின் முதல்வர் வேட்பாளராக பேசப்பட்டவருமான ஏ.நமச்சிவாயம் உள்ளிட்டோர், அடிக்கடி காரைக்கால் வந்து தேர்தல் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜகவைச் சேர்ந்த நடிகை கவுதமி காரைக்கால் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அதே சமயம் மற்ற கட்சிகளை சேர்ந்த குறிப்பாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேசிய தலைவர்கள், பொறுப்பாளர்கள் யாரும் இதுவரை தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக காரைக்கால் வரவில்லை.
பொதுவாக, தமிழகத்தின் நாகை மாவட்டத்துக்கு வரக்கூடிய தமிழக அரசியல் தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் அருகில் உள்ள காரைக்காலிலும் பிரச்சாரம் மேற்கொள்வது வழக்கம். ஆனால், அவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மட்டுமே கடந்த சில நாட்களுக்கு முன்னர் காரைக்காலுக்கு வந்து தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
கடந்த 18-ம் தேதி நாகையில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி, காரைக்கால் வழியாக மயிலாடுதுறை பகுதிக்குச் சென்றார். ஆனால், காரைக்காலில் பிரச்சார ஏற்பாடு செய்யப்படவில்லை.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி உள்ளிட்டோர் கூட இதுவரை காரைக்காலுக்கு வரவில்லை. அதனால் தேர்தல் பிரச்சாரக் களத்தில் பாஜக தீவிரமாக இயங்குவது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது.
அதே சமயம் மற்ற கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகுட்பட்ட பகுதிகளில், மக்களை தனித் தனியாக சந்தித்து தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதையும் களத்தில் காண முடிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT