Published : 23 Mar 2021 04:50 PM
Last Updated : 23 Mar 2021 04:50 PM
கூட்டணிக் கட்சிகளான பாஜக, அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட மூவர் என்.ஆர்.காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். சுயேச்சையாகப் போட்டியிடுவோர் ரங்கசாமி படத்தைப் பயன்படுத்தினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தற்போது என்.ஆர்.காங்கிரஸில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் கூட்டணிக் கட்சிகளான பாஜக, அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இச்சூழலில், இறுதி வாக்காளர் பட்டியல் தொகுதி வாரியாக வெளியானது. இதையடுத்து, என்.ஆர்.காங்கிரஸ் செயலாளர் ஜெயபால் இன்று (மார்ச் 23) வெளியிட்ட அறிக்கை:
"புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் பெயர்கள் தொகுதி வாரியாக வெளியிடப்பட்டுள்ளன.
இதில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி சுயேச்சையாக திருநள்ளாறு தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சிவா, உருளையன்பேட்டை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ நேரு, முத்தியால்பேட்டை தொகுதியில் போட்டியிடும் பிரகாஷ்குமார் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அவர்கள் வகித்து வந்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார்கள்.
ஒருசில தொகுதிகளில் சுயேச்சையாகப் போட்டியிடும் ஒருசில வேட்பாளர்கள் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் பெயரையும், கொடியையும், ரங்கசாமி படத்தையும் பயன்படுத்தி வருவதாகத் தெரிகிறது. அது கண்டிக்கத்தக்க செயல். கட்சியின் விதிமுறைகளுக்கு முரணான செயல். இச்செயல்கள் இனியும் தொடர்ந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுடன் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது".
இவ்வாறு ஜெயபால் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT