Published : 23 Mar 2021 01:38 PM
Last Updated : 23 Mar 2021 01:38 PM
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என, மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை கோரிக்கை விடுத்தார்.
விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போர் 2009-ம் ஆண்டு நிறைவடைந்தது. அப்போது, இலங்கைத் தமிழர்கள் கொலை செய்யப்பட்டது, தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என, ஐநா மனித உரிமைகள் கவுன்சில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், தற்போது ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், இலங்கை உள்நாட்டுப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கை விசாரித்தாக வேண்டும் என, பிரிட்டன், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகள் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளன. இந்தத் தீர்மானம் மீது இன்று (மார்ச் 23) வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில், இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில், இது தொடர்பாக, அதிமுக எம்.பி. தம்பிதுரை மாநிலங்களவையில் இன்று பேசுகையில், "ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகக் கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தில் இலங்கை அரசு புரிந்த குற்றங்களை விசாரிக்கக் கோரும் இந்தத் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும். அப்படி வாக்களிக்காவிட்டால் இலங்கைத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளை நாம் உறுதிப்படுத்த முடியாது. எந்த நாட்டிலும் நீதி மற்றும் சமத்துவத்துக்காகப் போராடும் அனைத்து இன மக்களுக்கும் ஆதரவாக அதிமுக எப்போதும் நின்றுள்ளது.
தமிழர்கள் பிரச்சினையாகவோ குறிப்பிட்ட இனப் பிரச்சினையாகவோ இதனைக் கருதி அதிமுக குரல் கொடுக்கவில்லை. இது நீதிக்காகவும் அமைதிக்காகவும் வேண்டிய குரல். பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகவும் அதிமுக குரல் கொடுத்துள்ளது. இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். உலகில் எங்கு போர்ச்சூழல் நிகழ்ந்தாலும், அது உலகின் அமைதியைக் குலைத்துவிடும். எனவே, நிரந்தரத் தீர்வு காண்பது நம் கடமை" என்று தம்பிதுரை பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT