Published : 23 Mar 2021 01:03 PM
Last Updated : 23 Mar 2021 01:03 PM
புதுச்சேரியில் தேர்தல் துறை அதிகாரிகள் அதிகாரபூர்வத் தகவலை முறைப்படி வெளியிடாலும், பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தாமலும் தவிர்த்து வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுவை ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் ஏப்ரலில் நடக்கிறது.
சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை, நடைமுறைகளை மாநிலத் தேர்தல் ஆணையம் மக்களுக்கு நாள்தோறும் தெரிவிப்பது வழக்கம். இதில் புதுச்சேரி மட்டும் விதிவிலக்காக உள்ளது.
கடந்தகால சட்டப்பேரவைத் தேர்தல்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நாளின் மாலையில் புதுவை தலைமைத் தேர்தல் அதிகாரி பத்திரிகையாளர்களைச் சந்தித்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அறிவிப்பார். அதன்பின் நாள்தோறும் புதுவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமானவர் நாள்தோறும் செய்திக் குறிப்பு, நேரடி பத்திரிகையாளர் சந்திப்பின் மூலமாக தேர்தலுக்கான ஏற்பாடுகளை, அன்றாடத் தகவல்களைத் தெரிவித்து வருவார்.
ஆனால், இந்தத் தேர்தலில் அறிவிப்பு வெளியான நாளில் புதுவை தலைமைத் தேர்தல் அதிகாரி புதுவையில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை மட்டும் பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்துத் தெரிவித்தார். இதன்பிறகு இன்றுவரை புதுவை மாவட்டத் தேர்தல் அதிகாரியோ, தலைமைத் தேர்தல் அதிகாரியோ, ஏன் தேர்தல் துறையில் ஒரு அதிகாரி கூட பத்திரிகையாளர்களை நேரில் சந்திக்கவே இல்லை.
வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் அலுவலகத்தினுள்ளே பத்திரிக்கையாளர்களைத் தேர்தல் துறையினர் அனுமதிக்க மறுத்த சம்பவமும் புதுச்சேரியில் நடந்தது.
வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நாளில் எத்தனை பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர் என்ற விவரத்தைத் தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பும், செய்திக் குறிப்பும் தரப்படவில்லை. இம்முறை வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள் விவரமே குளறுபடியாக இருந்தது. இந்தப் பட்டியலையும் மறுநாள்தான் வெளியிட்டனர்.
வேட்புமனு பரிசீலனையின்போது எத்தனை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்பதிலும் குளறுபடி நீடித்தது. வேட்பாளர் இறுதிப் பட்டியலை நேற்று வெளியிட வேண்டும். ஆனால், தேர்தல் துறை சார்பில் தொகுதிதோறும் போட்டியிடும் வேட்பாளர் எண்ணிக்கையை மட்டும் தெரிவித்து ஒரு செய்திக்குறிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தொகுதிவாரியாக வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியவற்றுடன் பட்டியலை வெளியிடவில்லை. இதுகுறித்துச் செய்தியாளர் சந்திப்பும் நடத்தப்படவில்லை.
அதேபோல போட்டியிடும் வேட்பாளர்களில் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் விவரம், போட்டியிடும் பெண்கள் விவரம், சுயேச்சைகள் விவரம் என எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இதுகுறித்துச் செய்தித்துறை அதிகாரிகளைக் கேட்டாலும் அவர்களுக்குத் தெரியவில்லை. தேர்தல் துறையைத் தொடர்பு கொண்டாலும் யாரும் தொலைபேசியைக்கூட எடுக்காத சூழலே நிலவுகிறது. தேர்தல் துறை இணையதளத்திலும் இந்நிகழ்வுகள் இன்று நண்பகல் வரை பதிவு செய்யப்படவில்லை.
நடைபெற உள்ள ஐந்து மாநிலத் தேர்தல்களில் 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரியில் நடக்கும் சூழல், தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT