Last Updated : 23 Mar, 2021 03:13 AM

1  

Published : 23 Mar 2021 03:13 AM
Last Updated : 23 Mar 2021 03:13 AM

சீமான் போட்டியிடுவதால் நட்சத்திர தொகுதியாக மாறியுள்ள திருவொற்றியூர்

தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு மிக அருகில் கடற்கரையையொட்டி அமைந்துள்ளது திருவொற்றியூர் தொகுதி. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதால் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.

கே.பி.பி.சங்கர் (திமுக), கே.குப்பன் (அதிமுக), சீமான் (நாம் தமிழர் கட்சி), எம்.சவுந்திரபாண்டியன் (அமமுக), டி.மோகன் (மக்கள் நீதி மய்யம்) உள்பட 22 பேர் களத்தில் உள்ளனர். சீமான் களத்தில் இருப்பதாலோ என்னவோ தொடக்கம் முதலே பிரச்சாரம் அனல் பறக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு திருவொற்றியூர் தொகுதிக்கு எதையும் செய்யவில்லை என்று திமுக வேட்பாளர் கே.பி.பி.சங்கரும், மெட்ரோ ரயில் உள்பட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருப்பதாகக் கூறி அதிமுக வேட்பாளர் கே.குப்பனும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவேன் என்று உறுதி அளித்து சீமான் பிரச்சாரம் செய்கிறார்.

திருவொற்றியூர் சட்டப்பேரவை தொகுதி, திருவொற்றியூர், எண்ணூர், மணலி உள்ளிட்ட சென்னை மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதிகள் அடங்கியது. வடசென்னை மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ள திருவொற்றியூர் தொகுதியின் எல்லைகளாக டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், பொன்னேரி ஆகிய தொகுதிகள் உள்ளன.

இத்தொகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. எண்ணூர் அனல் மின் நிலையம், அசோக் லேலண்டு, எம்.ஆர்.எப் டயர், சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, மெட்ராஸ் உரத் தொழிற்சாலை, என்பீல்டு மோட்டார் சைக்கிள் என ஏராளமான கனரக தொழிற்சாலைகள் உள்ளன. மணலியில் ஏராளமான ரசாயனத் தொழிற்சாலைகள் இருக்கின்றன.

மீனவர், வன்னியர், ஆதிதிராவிடர், நாடார், முதலியார் உள்ளிட்ட சமூகத்தினர் கணிசமாக வசிக்கின்றனர். இத்தொகுதியில் நடைபெற்ற 12 தேர்தல்களில் தி.மு.க. 6 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும், காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

2016-ம் ஆண்டு தேர்தலில் கே.பி.பி.சாமி (தி.மு.க.) 82,205 வாக்குகள் பெற்று வென்றார். பி.பால்ராஜ் (அ.தி.மு.க.) 77,342, ஏ.வி.ஆறுமுகம் (தே.மு.தி.க.) 13,463, ஆர்.கோகுல் (நாம் தமிழர்) - 3,313 ஆகியோர் தோல்வியைத் தழுவினர். கே.பி.பி.சாமி கடந்தாண்டு மறைந்த நிலையில், தற்போது திருவொற்றியூர் தொகுதி காலியாக உள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இளம் தலைமுறையினர் வாக்குகளைக் கவர்வதில் முனைப்புடன் செயல்படுகிறார்.

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டு 12,497 (7.24 சதவீதம்) வாக்குகள் பெற்றார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திருவொற்றியூர் தொகுதியை உள்ளடக்கிய வடசென்னை தொகுதியில் காளியம்மாள் போட்டியிட்டார். அவர் திருவொற்றியூர் தொகுதியில் மட்டும் 15,748 வாக்குகள் பெற்றார். இந்நிலையில், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான், தமிழ் தேசியம் முழக்கத்துடன் களம் காண்கிறார். பிற மாநிலத்தவரும் வசிக்கும் இத்தொகுதியில் அவர்கள் வாக்குகளைப் பெற சீமான் பகீரத பிரத்யனம் செய்ய வேண்டியதிருக்கும்.

அமமுக வேட்பாளர் எம்.சவுந்திரபாண்டியனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் பிரச்சாரம் செய்யும்போது "சவுந்தரபாண்டியன் ஒரு தொழிலதிபர், அவர் சராசரி அரசியல்வாதியைப் போல அராஜகம் செய்யமாட்டார். மக்களில் ஒருவராக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார். அதனால் அவருக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்" என்று கேட்டுக் கொண்டார். அவரும் அதுபோலவே வீதி, வீதியாக, வீடு, வீடாக வாக்கு சேகரிக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.டி.மோகன், ஒட்டுமொத்த மாற்றத்துக்காகவும், ஊழலற்ற நிர்வாகத்தை கொடுப்பதற்காகவும் களம் இறங்கியுள்ள கமல்ஹாசனின் கரத்தை வலுப்படுத்த தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரி வாக்கு சேகரித்து வருகிறார்.

22 பேர் போட்டியிட்டாலும் அதிமுக, திமுக, சீமான் உள்ளிட்ட 3 பேருக்கு இடையில்தான் போட்டி கடுமையாக உள்ளது. இதனால் யார் வென்றாலும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சீமான் அதிக வாக்குகளைப் பிரித்து, வெற்றி பெற வேண்டியவரை தோற்கடிப்பாரா அல்லது தோற்க வேண்டியவரை வெற்றி பெறச் செய்வாரா அல்லது சீமானே வெற்றி பெறுவாரா என்பது மே 2 -ம் தேதி தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x