Published : 23 Mar 2021 03:15 AM
Last Updated : 23 Mar 2021 03:15 AM

நெல்லை தொகுதியில் தாமரை மலருமா? - பெரும் கூட்டணியுடன் களத்தில் திமுக

திருநெல்வேலி

திருநெல்வேலி தொகுதியில் கூட்டணி கட்சியான அதிமுகவின் பலம், வாக்காளர்கள் மத்தியில் அறிமுகம் தேவைப்படாத வேட்பாளர், அமமுக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு போன்ற பல்வேறு சாதகங்களால் இம்முறை தாமரை நிச்சயம் மலரும் என்ற நம்பிக்கையுடன் பாஜகவினர் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். ஆனால் எதிர்தரப்பில் பலமான கூட்டணியுடன் திமுக களப்பணியாற்றி வருகிறது.

திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் 40 முதல் 55-வது வார்டுகளும், 1 முதல் 4 வார்டுகளும் இத்தொகுதியில் இணைந்துள்ளன. இதுபோல் சங்கர்நகர், நாரணம்மாள்புரம் பேரூராட்சிகளும் சுற்றியுள்ள 58 ஊராட்சிகளையும் உள்ளடக்கி பரந்துவிரிந்திருக்கிறது.

தாமிரபரணியும், அதனால் வளம்பெறும் நெல் விளையும் பூமியும் திருநெல்வேலியின் முக்கிய அடையாளங்கள். நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு தலங்களும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, பழமைவாய்ந்த பேட்டை மதிதா இந்துக் கல்லூரி, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி போன்ற பல்வேறு கல்வி நிலையங்களையும் இத்தொகுதி தன்னகத்தே கொண்டுள்ளது.

பிரச்சினைகள் ஏராளம்

திருநெல்வேலியில் தான் தாமிரபரணி பெருமளவில் மாசடைகிறது. மாசுபாடு ஒருபுறம் இருக்க, ஆற்றுத் தண்ணீரை பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு வழங்குவதும் முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. திருநெல்வேலி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மலைபோல தேங்கி, ராமையன்பட்டி பகுதி மக்களை துயரத்துக்கு ஆளாக்குகிறது.

திருநெல்வேலி மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருநெல்வேலி பேட்டையில் தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை கடந்த 1958-ல் தொடங்கப்பட்டு 2004-ம் ஆண்டு வரை செயல்பட்டது. லாபத்தில் இயங்கி வந்த இந்த நூற்பாலையை திடீரென மூடியதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்தனர். ஒவ்வொரு தேர்தலின்போதும் இதை திறப்பதாக வாக்குறுதி மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. கங்கைகொண்டானில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் பல்வேறு தொழிற்சாலைகளை தொடங்க நடவடிக்கை எடுத்து, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

கடந்த தேர்தல்கள் வரலாறு

இத்தொகுதியில் இந்து மதத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அதிகம். பேட்டை பகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் கணிசமாக உள்ளனர். பிள்ளைமார் சமுதாயத்தினர் அதிகமாகவும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரும், தேவர், யாதவா சமுதாயத்தினர் அடுத்த நிலையிலும் அதிக வாக்காளர்களாக இருக்கின்றனர்.

இத்தொகுதியில் 1952 முதல் 2016 வரை நடைபெற்ற 15 சட்டப்பேரவை தேர்தல்களில் தலா 6 முறை அதிமுகவும், திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. 3 முறை காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. 1986-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது. கடந்த 2016 தேர்தலில் திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ். லெட்சுமணன், அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை விட 601 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றிருந்தார். குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்த நயினார் நாகேந்திரன் இம்முறை பாஜக சார்பில் களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான தொகுதி பங்கீடு முடியும் முன்னரே, இங்கு தேர்தல் பணிகளை அவர் தொடங்கியிருந்தார். அதிகாரபூர்வமாக அவர் வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்னரே பிரச்சாரத்தை தொடங்கியது, வேட்புமனு தாக்கல் செய்தது என, பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னரும் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

பாஜகவின் நம்பிக்கை

இத் தொகுதியிலுள்ள அதிமுகவின் கணிசமான வாக்கு வங்கியை தாமரை சின்னத்துக்கு பெற்றுவிட்டால், வெற்றிபெற்றுவிடலாம் என்று பாஜகவினர் நம்பிக்கை தெரிவித்தனர். தற்போது இத் தொகுதியில் மனு தாக்கல் செய்திருந்த அமமுக வேட்பாளர் பால்கண்ணன் மனு நிராகரிக்கப்பட்டிருப்பது, நயினார்நாகேந்திரனுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பால்கண்ணனுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் இப்போது நயினார் நாகேந்திரனுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் 7 பட்டியல் இனத்தவரை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால், அவர்களது வாக்குகளும் பாஜகவுக்கு கிடைக்கும் என்றும், இம்முறை திருநெல்வேலியில் தாமரை மலரும் என்றும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியதால் அதிருப்தியில் இருந்த அதிமுகவினரை நயினார் நாகேந்திரன் சமரசம் செய்துவிட்டதாக தெரிகிறது. அவரது பிரச்சார நிகழ்ச்சிகளில் அதிமுகவினர் அதிகளவில் பங்கேற்கின்றனர்.

திமுகவுக்கு கூட்டணி பலம்

திமுக தரப்பில் ஏற்கெனவே வெற்றிபெற்ற தொகுதி என்பதால், அதை தக்கவைக்க தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். கடந்த 2016 தேர்தலில் பெரிய அளவுக்கு கூட்டணி இல்லாமல் திமுக வெற்றிபெற்றது. இம்முறை பெரும் கூட்டணி பலம் திமுகவுக்கு சேர்ந்திருக்கிறது. அத்துடன் அக் கட்சி வேட்பாளர் ஏஎல்எஸ் லட்சுமணன் சார்ந்துள்ள சமுதாய வாக்குகள் சிதறாமல் கிடைக்கும் என்று அக்கட்சியினர் நம்பியுள்ளனர். மேலும் இத் தொகுதியிலுள்ள பலமான திமுக வாக்கு வங்கி அவரை வெற்றிபெற வைக்கும் என்று, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x