Published : 22 Mar 2021 07:33 PM
Last Updated : 22 Mar 2021 07:33 PM
இந்தத் தேர்தல் விவசாயி எடப்பாடி பழனிசாமிக்கும், அரசியல் வியாபாரி ஸ்டாலினுக்கும் இடையில் நடைபெறும் தேர்தல் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார், ஆற்காடு பாமக வேட்பாளர் கே.எல்.இளவழகன் ஆகியோருக்கு ஆதரவாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (மார்ச் 22) மாலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஆற்காடு பேருந்து நிலையத்தில் பாமக வேட்பாளர் இளவழகனுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது பேசியதாவது:
''இந்தத் தேர்தலில் இரண்டு முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நமது கூட்டணியில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளர் விவசாயி. எதிரணியில் போட்டியிடுவது ஓர் அரசியல் வியாபாரி. இந்தத் தேர்தல் ஒரு விவசாயிக்கும் வியாபாரிக்கும் நடைபெறும் தேர்தல். இந்தத் தேர்தலில் நம்மைப் போன்ற ஒரு விவசாயி வெற்றிபெற வேண்டும்.
நமக்கு இது முக்கியமான தேர்தல். எல்லோரும் ஒரே அணியில் நின்று வெற்றிபெற வேண்டும். நம் கூட்டணி அன்பு, பாசம், நேசம் இருக்கும் கூட்டணி. திமுக வந்தால் சட்டமாவது ஒழுங்காவது. பத்து வருடமாகக் காய்ந்து போயிருக்கிறார்கள். இப்போது இருப்பது பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி. எவ்வளவோ திட்டங்கள் கொடுக்கின்ற ஆட்சி. திமுக பக்கம் யாரும் வரக்கூடாது.
திமுக தலைவர் ஸ்டாலின் வாயைத் திறந்தாலே பொய்யைத்தான் பேசுவார். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். அப்போதே சரியான முறையில் செயல்படத் தெரியாத ஸ்டாலின் எப்படி முதல்வராக வர முடியும்? தினமும் சட்டப்பேரவையில் வெளிநடப்பு, சட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியே வருவார். இந்த நாடகமெல்லாம் போதும். ஸ்டாலினிடம் ஆக்கபூர்வமான சிந்தனை இல்லை.
ராமதாஸ் வைக்கும் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றுகிறார். நம்முடைய நாற்பதாண்டுக் கோரிக்கையை நிறைவேற்றி 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்திருக்கிறார். அதைக் கொடுத்தவர் பழனிசாமி. இதை மிகப்பெரிய சாதனையாகக் கருதுகிறேன். வன்னியர்களைப் போன்று பின்தங்கிய சமுதாயங்களுக்கும் நாம் தனித்தனியாக இட ஒதுக்கீடு பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமை இருக்கிறது. அதை நாம் பெற்றுத் தருவோம்.
ராணிப்பேட்டை மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் ராமதாஸ். அதை நிறைவேற்றியவர் முதல்வர் பழனிசாமி. காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்தார். சாதிவாரிக் கணக்கெடுப்பை முதல்வர் நிறைவேற்றியுள்ளார்.
70 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விவசாயி முதல்வராக வந்துள்ளார். நம்மில் ஒருவர் முதல்வராக வந்துள்ளார். திமுகவில் வியாபாரிகள், முதலாளிகள் உள்ளனர். அந்தக் கட்சியே ஒரு கம்பெனி. இந்தத் தேர்தலை மக்களாட்சிக்கும் மன்னராட்சிக்கும் இடையே நடைபெறும் போராகப் பார்க்கிறேன். மக்களாட்சியில் யார் வேண்டுமானாலும் முதல்வராக வரலாம். திமுகவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறுநில மன்னர்கள் இருக்கிறார்கள்.
ஸ்டாலின் பிஹாரில் இருந்து வந்துள்ள பிரசாந்த் கிஷோரை நம்பியுள்ளார். அவரது கட்சித் தலைவர்களையும் தொண்டர்களையும் நம்பவில்லை. ஆனால், நாங்கள் உங்களை நம்புகிறோம். திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடையாது.
திமுக கரூர் வேட்பாளர் இப்போதே மணல் கொள்ளையை ஆரம்பிக்கலாம் எனக் கூறுகிறார். ஸ்டாலினுக்கு சமூக நீதி, இட ஒதுக்கீடு, சமத்துவம், வரலாறு, சரித்திரம் எதுவும் தெரியாது. ஆனால், எப்படியாவது முதல்வராக வேண்டும் என்று கனவு காண்கிறார். உங்கள் கனவு கனவாகத்தான் இருக்கும்.
சிறுபான்மை மக்களுக்கு உண்மையில் பாதுகாப்பு யார் என்றால் அதிமுக, பாமக கூட்டணிதான். உண்மையில் திமுக தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் குறித்து எதுவும் வெளியிடவில்லை. ஆனால், எங்கே சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டாலும் ராமதாஸ் ஓடிச்சென்று குரல் கொடுப்பார். இந்தக் கூட்டணியைப் பிரதமர் மோடி ஆசிர்வதித்துள்ளார்''.
இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT