Last Updated : 22 Mar, 2021 05:48 PM

1  

Published : 22 Mar 2021 05:48 PM
Last Updated : 22 Mar 2021 05:48 PM

வருங்காலத்தில் கடலில் விமானம் வந்து இறங்கும்; பாஜக ஆட்சியில் நிச்சயம் நடக்கும்: புதுவையில் நிதின் கட்கரி பேச்சு

புதுச்சேரி

புதுச்சேரியின் வேலைவாய்ப்பின்மை, வறுமை ஆகியவற்றைச் சீர்படுத்தி நாட்டின் முக்கிய மாநிலமாக புதுச்சேரியை மாற்றுவோம் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:

"காங்கிரஸ் ஆட்சியில் நாடு மிகவும் வறுமையில் இருந்தது. பிரதமர் மோடி பிரதமரானவுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்தப் பாடுபட்டார். இந்தியாவிலிருந்து வறுமையை ஒழிக்க வேண்டும், வளர்ச்சியை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தேசிய ஜனநாயகக் கூட்டணி பாடுபட்டு வருகிறது. உலகத்தில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முதலிடம் பெற வேண்டும் என்ற சிந்தனையோடு பிரதமர் மோடி செயல்படுகிறார்.

55 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் ஆட்சி செய்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் புதுச்சேரியிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால், எந்தவிதமான வளர்ச்சியும், முன்னேற்றமும் அடையவில்லை. இம்முறை பாஜ ஆட்சிக்கு வந்தால் இரு கட்சி ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

கடந்த 5 ஆண்டுகளில் புதுச்சேரிக்குப் பல திட்டங்களை மத்திய அரசு கொடுத்துள்ளது. காரைக்கால் துறைமுகத்திலிருந்து கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரை சாலை விரைவில் அமைக்கப்படும். புதுச்சேரி துறைமுக வளர்ச்சியில் பாஜ முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. துறைமுகத்தால் புதுச்சேரியில் வேலைவாய்ப்பும், மாநிலப் பொருளதாரமும் பெருகும். வருங்காலத்தில் கடலில் விமானம் வந்து இறங்கும். அதில் ஏறி மக்கள் செல்வார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் இது நிச்சயம் நடைபெறும் என உறுதியளிக்கிறேன்.

சிறப்பு படகுகள் மீனவர்களுக்கு வழங்கப்படும். ரூ.20 லட்சம் மதிப்புள்ள படகுகள் மானிய விலையில் வழங்கப்படும். இந்தப் படகுகள் 100 நாட்டிகல் மைல் வரை சென்று மீன்பிடிக்கலாம். இதன்மூலம் மீன்களைப் பதப்படுத்துதல், ஏற்றுமதி செய்தல் எனப் பொருளாதாரத்தில் மிகப்பெரும் வளர்ச்சி பெறும்.

புதுச்சேரியின் வேலைவாய்ப்பின்மை, வறுமை ஆகியவற்றைச் சீர்படுத்தி நாட்டின் முக்கிய மாநிலமாக புதுச்சேரியை மாற்றுவோம். புதுச்சேரியின் வளர்ச்சி புல்லட் ரயில் வேகத்தில் இரட்டை இன்ஜின் சக்தியோடு முன்னேறும். சர்வதேச சாலைகள், துறைமுகம், மீன்வள வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும். புதுச்சேரியின் வறுமையை, வேலைவாய்ப்பின்மையை ஒழிக்க வேண்டும். புதுச்சேரி மக்கள் விரும்பும் வளர்ச்சியை எங்கள் கூட்டணி அளிக்கும். மாற்றத்துக்கு வாக்களிக்க வேண்டிய நேரம் இது".

இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x