Published : 22 Mar 2021 05:19 PM
Last Updated : 22 Mar 2021 05:19 PM
எங்கள் ஆட்சிக் காலத்தில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும். அதுவும் அவர்கள் குடியிருக்கும் இடத்திலிருந்து 100 கிலோ மீட்டருக்குள் வேலை வழங்கப்படும் என்று நாகையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது கமல்ஹாசன் பேசினார்.
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம், திருப்பூண்டி கடைத்தெருவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று நாகை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் சையது அனாஸ், கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் டாக்டர்.ஜி.சித்து ஆகியோரை ஆதரித்து வாக்குச் சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
"மக்கள் நீதி மய்யம் மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். மீனவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும். கஜா புயலின்போது நான் இங்கு வந்தபோது மீனவ கிராமங்களைப் பார்த்திருக்கிறேன். நான் ஹெலிகாப்டரில் வருவதைக் கிண்டல் செய்கிறார்கள். இருக்கிற 15 நாட்களில் உங்களை எல்லாம் விரைவாகச் சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் ஹெலிகாப்டரில் வருகிறேன். அதுவும் என் காசில் வருகிறேன். அதுவும் நீங்கள் கொடுத்த காசுதான்.
எந்த ஊருக்குப் போனாலும் புறவழிச்சாலை இல்லை. ரயில் சேவை பல சிற்றூர்களுக்கு இல்லை. தமிழகத்தில் மூடப்பட்ட சாக்கடைகள் இல்லை. எம்எல்ஏக்களுக்குக் கொடுக்கும் பணம் இவற்றை சீரமைப்பதற்கே போதாது. அந்தப் பணத்தை பாக்கெட்டில் போட்டுக்கொண்டால் எந்த வேலையும் நடக்காது. அப்படிச் செய்யாமல் இருக்க நேர்மையானவர்களைத் தேர்தலில் நிறுத்த வேண்டும்.
நேர்மையாக இல்லாவிட்டால் தட்டிக் கேட்கிற தலைமை வேண்டும். எப்போது பார்த்தாலும் நேர்மை நேர்மை என்று பேசிக் கொண்டிருக்கிறீர்களே என்கிறார்கள். அதுதான் அடிப்படை. இங்கே ஊழல் சாக்கடை ஓடிக் கொண்டிருக்கிறது. அதைத் தடுத்தாக வேண்டும்.
எங்களிடம் ஏராளமான திட்டங்கள் உள்ளன. அவற்றை எதிர்க்கட்சிகள் வெட்கம் இல்லாமல் காப்பி அடிக்கின்றன. நான் 2 ஆண்டுகளுக்கு முன்பே கூறினேன். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று. எதுமே கஷ்டப்படாமல் கிடைக்காது. உங்கள் பாக்கெட்டில் இருந்து எடுத்து உங்கள் கையில் கொடுப்பதுதான் ஈஸி.
எங்கள் ஆட்சிக் காலத்தில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும். அதுவும் அவர்கள் குடியிருக்கும் இடத்திலிருந்து 100 கிலோ மீட்டருக்குள் வேலை வழங்கப்படும். கோயில், மசூதியை இடித்தால்தான் உங்களுக்குக் கோபம் வருகிறது. மணலைக் கொள்ளை அடித்தால், மலையை உடைத்தால் உங்களுக்குக் கோபம் வருவதில்லை.
எனக்கு மதம், சாதி கிடையாது. எனக்கு மதம் இல்லை என்றால் நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள்?. நாளை என் கொள்ளுப்பேரன் சாதி இல்லாமல் வாழ வேண்டும். எனக்கு சாதி இல்லை என்று சொல்வதற்குப் பெரியார் மட்டும் காரணம் இல்லை. என் வீட்டிலும் ஒரு பெரியார் இருந்தார். அவர் பெயர் சீனிவாசன். என் தந்தை. அதுபோல் நம் பிள்ளைகளையும் நாம் தயார் செய்ய வேண்டும்.
இல்லத்தரசிகளுக்கும், விதவைகளுக்கும், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். இதெல்லாம் முடியுமா என்று கேட்கிறார்கள். முடியும் என்பதால்தான் சொல்கிறேன்".
இவ்வாறு கமல் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT