Published : 19 Nov 2015 04:45 PM
Last Updated : 19 Nov 2015 04:45 PM
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி 45 சதவீதம் மட்டுமே வந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பாறு, தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
ஜனவரியில் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது.
இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள். அக்டோபர் மாதம் மத்தியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் போது உப்பு சீஷன் முடிவடையும்.
உற்பத்தி பாதிப்பு
இந்த ஆண்டும் வழக்கம் போல் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி தொடங்கி உற்சாகமாக நடைபெற்றது. இடையில் ஏப்ரல் மாதம் பெய்த கோடை மழை காரணமாக சுமார் ஒரு மாத காலம் உப்பு உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டது.
பழைய உப்பு கையிருப்பும் இல்லாததால், தூத்துக்குடி மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் குஜராத் மாநிலத்தில் இருந்து கச்சா உப்பு இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
கோடை மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்து, ஜூன் மாதம் முதல் வாரத்தில் தான் மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்கியது. அக்டோபர் மாதம் வரை 4 மாதங்கள் மட்டுமே உப்பு உற்பத்தி இருந்தது.
உற்பத்தி சரிவு
இதனால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி 45 சதவீதம் மட்டுமே இருந்தது. கடந்த ஆண்டு
90 சதவீதம் வரை இருந்தது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் சுமார் 12 லட்சம் டன் உப்பு மட்டுமே இந்த ஆண்டு உற்பத்தியாகியுள்ளது. ஆனால், விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2 மடங்கு உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு டன் உப்பு ரூ. 700 முதல் ரூ. 800 வரை மட்டுமே விற்பனையானது. இந்த ஆண்டு தற்போது ஒரு டன் உப்பு ரூ.1,200 முதல் ரூ. 1,800 வரை விற்பனையாகிறது.
இருப்பு குறைவு
தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஏ.ஆர்.ஏ.எஸ். தனபாலன் ‘தி இந்து’ நாளிதழிடம் கூறும்போது, ‘இந்த ஆண்டு மழை குறுக்கிட்டதால் உப்பு உற்பத்தி 45 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது. சுமார் 12 லட்சம் டன் உப்பு மட்டுமே உற்பத்தியாகியுள்ளது. இதுவரை 5 லட்சம் டன் வரை விற்பனையாகியுள்ளது. இன்னும் 7 லட்சம் டன் உப்பு மட்டுமே கையிருப்பு உள்ளது. இந்த உப்பு வரும் ஜனவரி மாதம் வரை மட்டுமே இருக்கும்.
தினமும் 4 ஆயிரம் டன்
தூத்துக்குடியில் இருந்து தினமும் 4 ஆயிரம் டன் உப்பு பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக செல்கிறது. தமிழகம் மற்றும் கேரளா முழுவதும், கர்நாடகாவில் 50 சதவீத பகுதிகளுக்கும், ஆந்திராவில் 25 சதவீத பகுதிகளுக்கும் தூத்துக்குடி உப்பு செல்கிறது. இதேபோல் வெளிநாடுகளுக்கும் மாதம் சராசரியாக 4000 டன் வரை உப்பு ஏற்றுமதியாகிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் உப்பு விலை இந்த ஆண்டு நன்றாக உள்ளது. ஆனால், போதுமான கையிருப்பு இல்லை. ஆந்திராவில் வெள்ளத்தில் உப்பளங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் சப்ளை செய்ய உப்பு இல்லை. எனவே, விலை உயர்ந்த போதிலும் உற்பத்தி குறைவு காரணமாக உற்பத்தியாளர்களுக்கு பெரிய அளவில் லாபம் இல்லை’ என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT