Published : 22 Mar 2021 10:57 AM
Last Updated : 22 Mar 2021 10:57 AM
திமுகவில் போட்டியிடுகின்ற பாதி பேர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள்தான். எ.வ.வேலு, ரகுபதி, செல்வகணபதி இதுபோல் பல பேர் இருக்கிறார்கள். திமுகவில் இருந்த சீனியர்கள் மறைந்துவிட்டார்கள். கூடாரம் காலியாகிவிட்டது. அதிமுகவிலிருந்து ஆளைப் பிடித்துப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என முதல்வர் பழனிசாமி பேசினார்.
திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
''அவரவர் சமயம் அவரவர்களுக்குப் புனிதமானது. அவரவர் தெய்வங்கள் அவரவர்களுக்குப் புனிதமானது. யாருடைய மனமும் நோகக் கூடாது. அதுதான் ஜனநாயகத்தின் அமைப்பு. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பங்கு உண்டு. ஆனால், சிலர் பிரித்து அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர். ஸ்டாலின் அவர்களே உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. உண்மை, நேர்மைதான் என்றும் வெல்லும்.
மக்களை எங்களை நம்புகிறார்கள். அதனால் மீண்டும் மீண்டும் ஆட்சியை எங்களிடம் தருகிறார்கள். நல்லது செய்தால், நல்லது நடக்கும். கெட்டது நினைத்தால் கெட்டதுதான் நடக்கும். நமது கூட்டணி கட்சித் தலைவர்கள் எல்லாம் நல்லதை நினைக்கிறார்கள். அதனால் நல்லது நடந்து கொண்டிருக்கிறது.
திமுக தலைவர் கருணாநிதி தான் உயிருடன் இருந் வரை ஸ்டாலினை திமுக கட்சித் தலைவராக ஆக்கவில்லை. கருணாநிதி இரண்டு ஆண்டு காலம் உடல்நலம் சரியில்லாமல், வெளியே வரவில்லை, யாருக்கும் அவரைக் காட்டவில்லை. அப்படி இருந்த நிலையிலும் கருணாநிதி தனது கட்சித் தலைவர் பதவியை ஸ்டாலினிடம் ஒப்படைக்கவில்லை. ஏன் என்றால் அவரே ஸ்டாலினை நம்பவில்லை. அதாவது அப்பாவே தனது மகனை நம்பவில்லை. அப்படி இருக்கும்போது மக்கள் எப்படி ஸ்டாலினை நம்புவார்கள்?
திமுக ஒரு குடும்பக் கட்சி. முதலில் கருணாநிதி, பின்னர் ஸ்டாலின், தற்போது உதயநிதி, பிறகு அவரது மகன் அன்புநிதி. கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள்தான் மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி ஆட்சி அதிகாரத்தில் வருவார்கள். வேறு யாரையும் வரவிட மாட்டார்கள். திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. திமுக கட்சி மக்களுக்குச் சேவை செய்யவா ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள், கொள்ளையடிப்பதற்குதான் ஆட்சிக்கு வரத் துடிக்கறார்கள்.
கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த ஒரே கட்சி திமுக. 2ஜி ஸ்பெக்டரம் ஊழல். 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்த கட்சி திமுக. முன்னாள் திமுக அமைச்சர்கள் 13 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் எங்களைப் பார்த்து ஊழல் கட்சி என்று பேசுகிறீர்கள். நாட்டிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான்.
திமுகவில் போட்டியிடுகின்ற பாதி பேர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள்தான். எ.வ.வேலு, ரகுபதி, செல்வகணபதி இதுபோல் பல பேர் இருக்கிறார்கள். திமுகவில் இருந்த சீனியர்கள் மறைந்துவிட்டார்கள். கூடாரம் காலியாகிவிட்டது. அதிமுகவிலிருந்து ஆளைப் பிடித்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்''.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT