Published : 22 Mar 2021 10:34 AM
Last Updated : 22 Mar 2021 10:34 AM
அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை திமுக தலைவர் ஸ்டாலின் என் மீது கூறி வருகிறார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு எஸ்.பி. வேலுமணி அளித்த பேட்டியில், “தொண்டாமுத்தூரில் அதிமுக, திமுக நேரடிப் போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. தொகுதியில் கடுமையான போட்டி இல்லை. என்னுடைய வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்று மக்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை என் மீது கூறி வருகிறார். என் மீது எந்த முகாந்திரமும் இல்லாமல் குற்றம் சாட்டுகிறார். சிறுபான்மையினருக்கு ஆதரவான அரசு அதிமுக அரசு” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ''தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தலை நிறுத்த திமுக முயல்கிறது. ஐபேக் நிறுவனத்தினர் ரவுடிகள், குண்டர்கள் என சுமார் 3 ஆயிரம் பேரைத் தொண்டாமுத்தூரில் களமிறக்கியுள்ளனர். அதிமுகவினரிடம் வம்பிழுத்து, பிரச்சினைகளை உருவாக்கி, தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தலை நிறுத்த திமுக முயல்கிறது'' என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு, தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, ''தொண்டாமுத்தூர் தொகுதியில் அராஜகம் செய்யக்கூடிய, குண்டர்கள் தொடர்பான காரியங்களைச் செய்யக்கூடிய ஒரே நபர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான்” என்று பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT