Last Updated : 22 Mar, 2021 03:13 AM

 

Published : 22 Mar 2021 03:13 AM
Last Updated : 22 Mar 2021 03:13 AM

பிரச்சாரத்தில் பிரியாணி கிண்டிய வேட்பாளர்

எழும்பூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரியதர்ஷினி, கடை ஒன்றில் பிரியாணி சமைத்து கொண்டிருந்த சமையலரிடம், அதற்கான செய்முறை விளக்கத்தை கேட்டதோடு, கரண்டியை பிடித்து சிறிது நேரம் பிரியாணியை கிளறியபடி அங்குள்ளவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

எழும்பூர் தொகுதியில் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதிமய்ய வேட்பாளர் பிரியாணி கிண்டியபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல்6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையே சென்னை எழும்பூர் (தனி) தொகுதியில் பரந்தாமன் (திமுக), ஜான் பாண்டியன்(அதிமுக அணி), பிரபு (தேமுதிக), கீதா லட்சுமி (நாம் தமிழர்), பிரியதர்ஷினி (மக்கள் நீதி மய்யம்) உள்ளிட்ட 18 பேர் போட்டியிடுகின்றனர்.

தற்போது வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றதை அடுத்து பிரதான கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரியதர்ஷினி சேத்துப்பட்டு எம்.எஸ்.நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கட்சியின் சின்னமான டார்ச் லைட்டை கையில் ஏந்தியபடி நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, ‘‘எழும்பூர் தொகுதியில் கடந்த 60 ஆண்டுகளாக பெண்கள் யாரும் சட்டமன்ற உறுப்பினராக வரவில்லை. எனக்கு ஒரு வாய்ப்பு தரவேண்டும். முதல்வராக யார் வரவேண்டும் என்பதை பார்க்காமல் சட்டமன்ற உறுப்பினரை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும்’’என்றார்.

இதற்கிடையே பிரச்சாரத்தின்போது ஒரு கடையில் பிரியாணி சமைத்து கொண்டிருந்த சமையல் காரரிடம், அதற்கான செய்முறை விளக்கத்தை கேட்ட பிரியதர்ஷினி, தொடர்ந்து கரண்டியை பிடித்து சிறிது நேரம் பிரியாணியை கிளறியபடி அங்குள்ளவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

திமுக வேட்பாளர் பரந்தாமன், புளியந்தோப்புக்கு உட்பட்ட சிவராஜபுரம் குடிசை மாற்று வாரியம் பகுதியில் வீடு வீடாக சென்றுவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக அறிவிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். பிரச்சாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பரந்தாமன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘திமுகவின் கதாநாயகனான தேர்தல்அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். பொதுமக்களின்கோரிக்கைகள் 100 நாட்களில் நிவர்த்திசெய்யப்படும். ஆட்சி மாற்றத்தை மக்கள்எதிர்பார்த்து திருவிழாபோல் தேர்தல் நாளுக்காக காத்திருக்கின்றனர். நிச்சயம் எழும்பூர் தொகுதியில் வெற்றி பெறுவேன்’’என்றார்.

அதேபோல், அதிமுக சார்பில் போட்டியிடும் ஜான் பாண்டியன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து சூளை பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x