Published : 22 Mar 2021 03:13 AM
Last Updated : 22 Mar 2021 03:13 AM
எந்திரன் -3 படம் எடுக்க நேர்ந்தால் ரோபோவுக்கு பெயர் சேகர்பாபு என வைத்தால் பொருத்தமாக இருக்கும் என காங்கிரல் நிர்வாகி பேச்சால், செயல்வீரர்கள் கூட்டத்தில் திடீர் சிரிப்பலை ஏற்பட்டது.
சென்னை மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் முடிந்துவிட்ட நிலையில், சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், துறைமுகம் சட்டப்பேரவை த் தொகுதி காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் பேசியதாவது:
ஒரு தொகுதியின் பாதுகாவலர் எப்படி இருக்க வேண்டும் என்றால், எல்லா மக்களையும் நேசிக்கின்ற, எல்லோரையும் அன்பு பாராட்டுகின்ற, எல்லோருடைய நம்பிக்கையும் பெருகின்ற ஒரு தலைவனாக இருக்க வேண்டும் என்பது தான், ஒவ்வொரு தொகுதி வாக்காளர்களின் விருப்பமாக உள்ளது. அப்படி ஒரு வேட்பாளர் கிடைக்கவில்லையே என மக்கள் ஏங்குகின்றனர். மக்கள் விரும்பும் ஒரு தலைவராக, துறைமுகம் தொகுதி திமுக வேட்பாளர் பி.கே.சேகர்பாபு உள்ளார். இத்தொகுதியில் திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி, முன்னாள் பொதுச்செயலர் க.அன்பழகன் ஆகியோர் வரிசையில், பி.கே.சேகர்பாபு வெற்றியை தக்கவைத்து வருகிறார். இவர் உழைப்பதற்கு கொஞ்சமும் அஞ்சாதவர். இவரது உழைப்பு, ரோபோவைப் போல மனித சக்திகளுக்கு அப்பாற்பட்டது போன்று உள்ளது.
எந்திரன் திரைப்படத்தில் வரும் ரோபோவுக்கு சிட்டிபாபு என இயக்குநர் சங்கர் பெயரிட்டார். அவர் எந்திரன்- 3 படம் எடுக்கும்பட்சத்தில், அந்த ரோபாவுக்கு சேகர்பாபு என பெயரிட்டால், அது பொருத்தமாக இருக்கும். அவரை ரோபோவைப் போல தொகுதிக்கு தொடர்ந்து உழைத்து வருகிறார். இவ்வாறு அவர் கூறியதும், கூட்டத்தில் பங்கேற்றிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் குபீர் சிரிப்பலை எழுந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT