Published : 22 Mar 2021 03:13 AM
Last Updated : 22 Mar 2021 03:13 AM
கரோனாவினால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுடன் வாக்காளர்கள் தொலைபேசியில் உரையாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் சார்பில் வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதியில் சந்தோஷ் பாபு போட்டியிடுகிறார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இதனால், தொகுதிக்கு நேரில் சென்று வாக்காளர்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள முடியாது சூழல் ஏற்பட்டது.
இருப்பினும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சந்தோஷ் பாபுவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வேட்பாளருடன் வாக்காளர்கள் தொலைபேசி வழியாக தொகுதி சார்ந்த பிரச்சினைகளை எடுத்துரைக்க 9445947070 என்ற தொலைபேசி எண் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
கரோனா நோய் தொற்றினால் வேட்பாளர் சந்தோஷ் பாபு பாதிக்கப்பட்டிருந்தாலும் பிரச்சாரம் எந்த வகையிலும் தடைப்படக் கூடாது என்ற நோக்கத்தை முன்னிறுத்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
அதன் ஒரு பகுதியாக தான் தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்ததொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தொகுதி சார்ந்து வாக்காளர்கள் தெரிவிக்கக்கூடிய பிரச்சனைகளை மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட உள்ள வேளச்சேரி தொகுதியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்ய உள்ளோம்.
இதுமட்டுமின்றி, வேட்பாளர் சந்தோஷ் பாபு வெற்றி பெற்றால் இப்பிரச்சனைகளுக்கு உரிய தீர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்காளர்களிடம் உறுதியளிக்க உள்ளோம். மேலும் சந்தோஷ் பாபுவுடன் பேச வாக்காளர்கள் விருப்பப்பட்டால் அவருடன் தொலைபேசி வாயிலாக உரையாடுவதற்கும் ஏற்பாடுகளை செய்துள்ளோம். வேட்பாளர் வாக்காளர்களுடனான தொடர்பை உறுதிப்படுத்துவதற்கு இதுபோன்ற முன்னெடுப்பை செய்துள்ளோம். தொலைபேசி எண் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரத்தை தொகுதி முழுவதும் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT