Published : 22 Mar 2021 03:13 AM
Last Updated : 22 Mar 2021 03:13 AM
தேர்தல் பணிகளில் அதிமுகவினர் ஆர்வம் காட்டாததாலும், முஸ்லிம் பகுதிகளில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாலும் பாஜக வேட்பாளர்கள் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் இரு வாரங்களே இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளது. சுட்டெரிக்கும் வெயில், கரோனா பரவல் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, திருநெல்வேலி, விருதுநகர், மதுரைவடக்கு, ராமநாதபுரம், காரைக்குடி, அரவக்குறிச்சி, திருவையாறு, திட்டக்குடி (தனி),மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), கோவைதெற்கு, உதகமண்டலம், தளி, திருவண்ணாமலை, திருக்கோவிலூர், ஆயிரம் விளக்கு, துறைமுகம் ஆகிய 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதில் நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு தவிர மற்ற தொகுதிகளில் முழுக்க முழுக்க அதிமுகவை நம்பியே பாஜக களமிறங்கியுள்ளது. ஆனால், பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அதிமுகவினர் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பலரும் தேர்தலில் போட்டியிடுவதால் அவர்களின் தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாக பாஜக வேட்பாளர்கள் கட்சி தங்கள் கட்சி மேலிடத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி ஆகியோர் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம், அதிமுகவினரின் ஒத்துழையாமை குறித்து பேசியுள்ளனர். ஆனாலும், அதிமுகவினர் நாங்கள் போட்டியிடும் தொகுதிகளை கண்டுகொள்வதே இல்லை என்கின்றனர் பாஜகவினர். இது தொடர்பாக தமிழக பாஜக நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, “பாஜகவுக்கு குறைந்தது 50 சதவீத வாக்குச் சாவடிகளில் 20 பேர் கொண்ட குழு உள்ள நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, ராமநாதபுரம், கோவை தெற்கு, உதகமண்டலம், துறைமுகம் போன்ற தொகுதிகளில் நிலைமையை சமாளித்து விடலாம். ஆனால், மற்ற தொகுதிகளில் அதிமுகவினரின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம். திமுகவை தோற்கடிக்க வேண்டுமானால் பாஜகவையும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதை அதிமுகவினர் உணர வேண்டும்” என்றனர்.
அரவக்குறிச்சி உள்ளிட்ட பாஜக போட்டியிடும் தொகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பிரச்சாரம் செய்ய பாஜக வேட்பாளர்கள் அனுமதிக்கப்படாததால் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். திருச்சி மேற்கு, பழனி போன்ற பல தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களும் இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக அரவக்குறி்ச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையிடம் கேட்டபோது, “ அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் சுமார் 20 ஆயிரம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். அவர்களில் பலர் குறிப்பாக பெண்கள் பாஜகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினரையும் மதிக்கக் கூடிய கட்சி பாஜக. இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் சென்று பிரச்சாரம் செய்ய அனைவருக்கும் உரிமை உள்ளது. பள்ளப்பட்டியில் கண்டிப்பாக நான் பிரச்சாரம் செய்வேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT