Published : 22 Mar 2021 03:13 AM
Last Updated : 22 Mar 2021 03:13 AM
அதிகாரம் இல்லாத போதே அதிகாரிகளை ஸ்டாலின் மிரட்டுகிறார் என ஊத்தங்கரையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேப்பனப்பள்ளி கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரி அசோக்குமார், பர்கூர் கிருஷ்ணன், ஊத்தங்கரை தமிழ்ச்செல்வம் ஆகியோரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். ஊத்தங்கரையில் பிரச்சாரத்தின் போது முதல்வர் பேசியதாவது:
இந்த தேர்தலில் நாம் எதிரிகளை வீழ்த்த வேண்டும். அதிமுவை அழிக்க நினைத்த துரோகிகளுக்கு இந்த தேர்தல் மூலம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பொய் பிரச்சாரங்களைச் செய்து வருகிறார். திமுக குடும்பத்துக்கான கட்சி. அதிமுக மக்களுக்கான கட்சி. மக்களின் தேவைகளை, விருப்பங்களை அறிந்து இந்த அரசு செயல்படுகிறது.
2006-ல் நடந்த தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் நிலம் இல்லாதவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாகக் கூறினார்கள். உங்களுக்கு தந்தார்களா? உங் களின் நிலங்களை அவர்கள் பிடுங்காமல் இருந்தாலே போதும்.
அதிமுக ஆட்சியில் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. இங்கு சாதி, மத பிரச்சினைகள் கிடையாது. அராஜகம் நிறைந்த திமுக ஒரு போதும் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அராஜகம் செய்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் டிஜிபியை மிரட்டுகிறார்.
நேற்றைய தினம் ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதிகாரிகளை ஒரு கை பார்ப்போம் என்று மிரட்டுகிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, அதிகாரம் இல்லாத போதே அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள்.
அதிமுக ஆட்சியில் அதிகாரிகளை அன்போடு பேசி, ஊக்குவித்து அரசின் திட்டங்களை மக்களுக்குச் சென்றடையும் வகையில் பணியாற்ற செய்தோம்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
சிறுபான்மையினருக்கு நல உதவி
கிருஷ்ணகிரியில் அதிமுக வேட்பாளர் அசோக்குமாரை ஆதரித்து தமிழக முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
2006-11-ம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழகத்தில் கடுமை யான மின்வெட்டு இருந்தது. 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகளால் தமிழ கத்தில் மின்வெட்டு முற்றிலுமாக நீங்கியது. தற்போது மின் மிகை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. சிறுபான்மையின மக்களை அரண் போல் பாதுகாப்பது அதிமுக அரசு தான். சிறுபான்மையின மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்துள்ளோம். அப்துல்கலாம் ஜனாதிபதி யாக அதிமுக வாக்களித்தது. திமுக அவருக்கு எதிராக வாக்களித்தது. இவ்வாறு முதல்வர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT