Published : 22 Mar 2021 03:13 AM
Last Updated : 22 Mar 2021 03:13 AM

வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை- எம்எல்ஏவிடம் பெண்கள் வாக்குவாதம்

குன்னவாக்கம் கிராமத்தில் எம்எல்ஏவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக பெண் வேட்பாளரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ வரலட்சுமி போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது குன்னவாக்கம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பணியாற்றிய பெண்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அங்கிருந்த பெண்கள், “கடந்த முறை நீங்கள் வாக்கு சேகரிக்க வந்தபோது, எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்வதாக வாக்குறுதி அளித்தீர்கள். பேருந்து வசதி, ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதாக உறுதியளித்தீர்கள். ஆனால் செய்யவில்லை” என அவரிடம் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு எம்எல்ஏ, “ஆளுங்கட்சியினர் நான் வைத்த கோரிக்கை எதையும் நிறைவேற்றவில்லை. இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றப்படும். மேலும், ஸ்டாலின் அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் வீடு தேடி வரும்” என உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து அங்கு வந்த பெண்களுக்கு சால்வை அணிவித்து வாக்கு சேகரித்து சென்றார்.

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: செங்கல்பட்டு எம்எல்ஏ தொகுதிக்கு தேவையான அனைத்து பிரச்சினைகளையும் சட்டப்பேரவையில் முன்வைத்தார். செங்கல்பட்டில் பாதாள சாக்கடை திட்டம், புறவழி சாலையில் பேருந்து நிறுத்தம், கிராமப்புறங்களுக்கு பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சட்டப்பேரவையில் எம்எல்ஏ பேசினார். ஆனால் ஆளுங்கட்சி எதையும் செய்யவில்லை. இந்த முறை திமுக ஆட்சி அமைவது உறுதியாக உள்ளது. எனவே, ஆட்சி அமைந்தவுடன் பொது மக்களின் பிரச்சினைகள் ஓராண்டில் களையப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x