Published : 22 Mar 2021 03:14 AM
Last Updated : 22 Mar 2021 03:14 AM
சாதி, மத, அரசியல் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக வேட்பாளர்களை பிரச்சாரம் செய்யவிடாமல் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம், காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளன.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு பிரச்சாரம் செய்ய செல்லும்போது, சில இடங்களில் வேட்பாளர் மீதோ அல்லது அவர் சார்ந்த கட்சி, கூட்டணியினர் மீதோ கோபத்தில் இருக்கும் பொதுமக்கள் கருப்புக் கொடி காட்டியோ அல்லது ஜனநாயக ரீதியில் வேறு ஏதேனும் ஒரு வகையிலோ எதிர்ப்பு தெரிவிப்பர். ஆனால் இந்தத் தேர்தலில் அதற்கு மாறாக வேட்பாளர்களை பிரச்சாரமே செய்யவிடாமல் தடுக்கும்போக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.கதிரவன் இருதினங்களுக்கு முன் இனாம் சமயபுரம் பகுதிக்கு ஓட்டுக் கேட்கச் சென்றார்.
அப்போது அங்கிருந்த குறிப் பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிலர், திமுக வேட்பாளர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அப்பகுதிக்குள் ஓட்டுக்கேட்டு வரக்கூடாது எனவும், தங்களது ஓட்டு, தங்களின் சமூகம் சார்ந்த வேட்பாளருக்கே எனவும் முழக் கமிட்டு, வாக்குவாதத்தில் ஈடு பட்டனர்.
அதன்பின் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலையிட்டு அங்குள்ள முக்கிய பிரமுகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, திமுக வேட்பாளர் எஸ்.கதிரவன் நேற்று முன்தினம் மீண்டும் அங்குசென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதேபோல திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அதி முக வேட்பாளர் பத்மநாபன், அமைச்சர் வளர்மதி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் உறையூர் பாண்டங்கலம் முஸ்லிம் தெருவில் பிரச்சாரத்துக்குச் சென் றார். அப்போது அங்கு திரண்ட சிலர், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவினர் தங்களது பகுதிக்கு வாக்கு சேகரிக்க வரக்கூடாது எனக்கூறி அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. போலீஸார் குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிமுகவினர் அங்கு பிரச்சாரம் செய்யாமலேயே திரும்பிச் சென்றனர்.
இதேபோல, திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு நேற்று முன்தினம் பஞ்சப்பூர் பகுதிக்கு வாக்கு சேகரிக்கச் சென்றபோது, தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனக் கூறி, ஊருக்குள் செல்ல விடாமல் சிலர் தடுத்தனர். அப்போது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி சமாதா னப்படுத்தி, அதன்பின் பிரச்சாரம் செய்யச் சென்றார்.
சுதந்திரமாகச் சென்று பிரச்சாரம்
இதுகுறித்து அரசியல் பார்வை யாளரான கே.கே.நகர் தென்றல் நகரைச் சேர்ந்த பெரியசாமி கூறும் போது, ‘‘சாதி, மதம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக வேட்பாளர்களை ஊருக்குள் வரவிடாமல் தடுக்கும்போக்கு அதிகரிப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. இது சட்டம், ஒழுங்கு சீர்கேடுகளுக்கும் வழிவகுக்கிறது. எனவே வேட்பாளர்கள் தங்களது தொகுதியின் அனைத்து பகுதிக்கும் சுதந்திரமாகச் சென்று பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
ஜனநாயக உரிமையை தடுக்கக்கூடாது
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சு.சிவ ராசுவிடம் கேட்டபோது, ‘‘வேட்பா ளர்களை தங்கள் பகுதிக்கு வர விடாமல், பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பது குற்றமாகும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வேட் பாளர்கள் புகார் அளித்தால், காவல்துறை மூலம் உரிய நடவ டிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதனிடம் கேட்டபோது, ‘‘உறையூர் பகுதி யில் அதிமுக வேட்பாளரை தெரு வுக்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியவர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேட்பா ளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவது அவர்களின் ஜனநாயக உரிமை. அதை யாரும் தடுக்கக்கூடாது. யாரேனும் இதுபோல அத்துமீறி செயல்பட்டால், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT