Last Updated : 22 Mar, 2021 03:14 AM

1  

Published : 22 Mar 2021 03:14 AM
Last Updated : 22 Mar 2021 03:14 AM

ஆன்மிகத் தலத்தில் அனல் பறக்கும் போட்டி: திருச்செந்தூரில் திமுகவுடன் முட்டி மோதும் அதிமுக - அனிதாவின் வெற்றி தொடருமா?, தட்டிப்பறிக்கப்படுமா?

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் முக்கியமானது திருச்செந்தூர் தொகுதி. முருகனின் இரண்டாம் படை வீடாக விளங்கும் இத்தொகுதியில் பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலும் அமைந்துள்ளது.

முக்கிய ஆன்மிகத் தலமாகவும், சுற்றுலா மையமாகவும் விளங்கும் இத்தொகுதியில் காயல்பட்டினம் நகராட்சி, திருச்செந்தூர், ஆத்தூர், ஆறுமுகநேரி, கானம், தென்திருப்பேரை, நாசரேத், உடன்குடி ஆகிய பேரூராட்சிகள் மற்றும் பல்வேறு ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன. பிரதான தொழில் விவசாயமும், அடுத்ததாக மீன்பிடித் தொழில் உள்ளது. ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் உப்புத் தொழிலும் நடந்து வருகிறது.

இத்தொகுதியில் 50 சதவீதம் நாடார் சமுதாயத்தினர், 20 சதவீதம் ஆதிதிராவிடர் சமூகத்தினர் உள்ளனர். யாதவர்கள், இஸ்லாமியர்கள், தேவர், பிள்ளைமார் உள்ளிட்ட இதர சமுதாயத்தினரும் வசித்து வருகின்றனர். நாடார் வாக்குகள் அதிகம் என்பதால் அனைத்துக் கட்சிகளும் அச்சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளர்களையே களம் இறக்குகின்றன.

2.43 லட்சம் வாக்காளர்கள்

திருச்செந்தூர் தொகுதியில் 1,18,069 ஆண் வாக்காளர்கள், 1,25,268 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேர் என மொத்தம் 2,43,375 வாக்காளர்கள் உள்ளனர். 1952 முதல் 15 பொதுத்தேர்தல்களையும், 1 இடைத்தேர்தலையும் இத்தொகுதி சந்தித்துள்ளது. 14 பொதுத்தேர்தல்களில் அதிமுக 6 முறையும், திமுக 6 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வென்றுள்ளன. 2009-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

2016 தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட அவர் 26,001 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 88,357 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட சமக தலைவர் ஆர்.சரத்குமார் 62,356 வாக்குகளை பெற்றார். தேமுதிக வேட்பாளர் எஸ்.ஏ.செந்தில்குமார் 6,330 வாக்குகளையும், பாஜக வேட்பாளர் வி.ஜெயராமன் 4,289 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ்.குளோரியான் 2,041 வாக்குகளையும், பாமக வேட்பாளர் டி.குமரகுருபர ஆதித்தன் 578 வாக்குகளையும் பெற்றனர்.

திமுக, அதிமுக நேரடி மோதல்

இந்த தேர்தலிலும் திமுக கூட்டணி சார்பில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் களம் காணுகிறார். அதிமுக சார்பில் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், அமமுக சார்பில் வடமலை பாண்டியன், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமக சார்பில் ஜெயந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் எஸ்.குளோரியான் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஆனால், திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கடந்த 2001 முதல் நடைபெற்ற 5 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தொடர்ந்து 20 ஆண்டுகளாக இத்தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். தொகுதி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை தொடர்ந்து தக்க வைத்திருப்பது அவருக்கு சதகமான அம்சமாக உள்ளது. மேலும், இம்முறை விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக போன்ற கூட்டணி கட்சிகள் இடம் பெற்றுள்ளது கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

காயல்பட்டினத்தில் உள்ள முஸ்லிம் சமுதாய வாக்குகள் மற்றும் தொகுதியில் கணிசமாக உள்ள கிறிஸ்தவர் வாக்குகள் அனிதாவுக்கு மேலும் வலு சேர்க்கின்றன. தேர்தல் வியூகங்களை வகுப்பதிலும், களப்பணியாற்றுவதிலும் அவருக்கு உள்ள அனுபவம் மற்றும் தனது கட்சியினரையும், கூட்டணி கட்சியினரையும் ஒருங்கிணைத்து செயல்படுவது போன்றவை அவருக்கு சாதகமான அம்சங்களாக இருக்கின்றன.

அதேநேரத்தில் 5 முறை வெற்றி பெற்ற போதும் தொகுதியில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எந்த வளர்ச்சி திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை கொண்டு வரவில்லை. முக்கிய ஆன்மிகத் தலமாகவும், சுற்றுலா மையமாகவும் இருப்பதால் தினம் தோறும் ஆயிரக்கணக்கானோர் திருச்செந்தூர் வந்து செல்லும் நிலையில் இதற்கேற்ப அடிப்படை வசதிகளை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தொகுதி மக்கள் மத்தியில் நீண்ட காலமாக பெரும் குறையாக இருக்கிறது.

மக்களின் எதிர்பார்ப்புகள்

குலசேகரன்பட்டினம், மணப்பாடு, காயல்பட்டினம் கடற்கரை பகுதிகளை சுற்றுலா மையங்களாக மேம்படுத்த வேண்டும். இத்தொகுதியில் சிறப்புற்று விளங்கும் பனைத்தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்தை பாதுகாக்க குளங்களை தூர்வார வேண்டும். வெற்றிலை விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்பதும் தொகுதி மக்களின் கோரிக்கைகளாக உள்ளன.

உடன்குடி அனல்மின் நிலையத் திட்டம் மற்றும் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் திட்டம் ஆகியவற்றை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நிறைவேற்ற வேண்டும் என்பதும் இத்தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிமுக சார்பில் போட்டியிடும் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் அரசியலு க்கு புதுமுகம். 2006-ல் அதிமுக உறுப்பினராக இணைந்த இவர், கடந்த 6 மாதங்களாகத்தான் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஈடுகொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். அனிதாவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இவர் வந்திருப்பதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். மேலும், தொகுதியில் பாஜகவுக்கு இருக்கும் கணிசமான வாக்கு வங்கி அவருக்கு பலமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

அதேநேரத்தில் கே.ஆர்.எம்.ராதா கிருஷ்ணனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதை அதிமுக முன்னோடி நிர்வாகிகள் விரும்பவில்லை. அதிமுகவில் முக்கிய பிரமுகராக இருந்த வடமலை பாண்டியன் தனக்கு சீட் கிடைக்காததால், அக்கட்சியில் இருந்து விலகி அமமுகவில் இணைந்து திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுவது சற்று நெருக்கடியை ஏற்படுத்தும். அதுபோல சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதிலும் அதிமுகவுக்கு சிரமம் உள்ளது.

6-வது முறையாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆதரவு திரட்டி வருகிறார். அவருக்கு இணையாக கேஆர்எம் ராதாகிருஷ்ணனும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.அனிதாவின் வெற்றி தொடருமா?, தட்டிப்பறிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x