Published : 22 Mar 2021 03:15 AM
Last Updated : 22 Mar 2021 03:15 AM

முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கிய 20 சதவீத இடஒதுக்கீட்டால் வன்னியர்கள் பயனடைந்துள்ளனர்: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

திருவண்ணாமலையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்பென்னாத்தூர் திமுக வேட்பாளர் பிச்சாண்டியை ஆதரித்து பேசும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.

திருவண்ணாமலை

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கிய 20 சதவீத இடஒதுக்கீடு காரணமாக வன்னியர்கள் பயன டைந்துள்ளனர் என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

கீழ்பென்னாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட் பாளர் பிச்சாண்டியை ஆதரித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணியின் செயல்வீரர்கள் கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் வேணு கோபால் தலைமை வகித்தார். திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “கீழ்பென்னாத்தூர் தொகுதியின் வளர்ச்சிக்காக பாடுபடுபவர். மண்ணின் மைந்தர். அவரது சொந்த ஊர், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் உள்ள நாறையூர் கிராமம். ஆனால், பாமக சார்பில் போட்டியிடுபவர், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து ராமதாஸ் மூலம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளார். தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ எதிரொலிமணியன், பாமக துணை பொதுச் செயலாளர் காளிதாஸ், மாவட்டத் தலைவர் ஜானகிராமன் போன்றவர்கள் எல்லாம், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் போட்டியிட தகுதி இல்லாதவர்களா? அவரை தேடி பண்ருட்டிக்கு செல்ல வேண்டும். அதனால், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் பிச்சாண்டியை தேர்வு செய்யுங்கள்.

திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என பத்திரத்தில் எழுதி தருகிறேன் என தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு, நல்லாட்சி என பிரச்சாரம் செய்து வருகிறார். அதேநேரத்தில், அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை ஆளுநரிடம் அன்புமணி ராமதாஸ் வழங்கியதை நினைவு கூறுகிறேன். இவர்களுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். சமூக நீதி பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும் என அன்புமணி கேட்கிறார். சமூக நீதி என்பது மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என்பதாகும்.

எம்ஜிஆர் ஆட்சியில் நடை பெற்ற இடஒதுக்கீடு போராட்டத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட 23 பேர் குடும்பங்களுக்கு, உதவிகளை செய்து கொடுத்தவர் கருணாநிதி. அவர்தான் எம்பிசிக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கினார். அதனால், கிருஷ்ணகிரி, தருமபுரி, தி.மலை, வேலூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த வன்னியர்கள் பயனடைந்தனர்.

ஆனால், இப்போது 10.5 சதவீதம் இடஒதுக்கீடு என அறிவித்துள்ளதால், வட தமிழகத்தில் வன்னியர்கள் பாதிக்கப்படுவது தான் அரசின் சாதனையா? அன்பு மணிக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் பதவியை பெற்று கொடுத்தவர் கருணாநிதி. அந்த நன்றி உணர்வுகூட இல்லை” என்றார். இதில், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x