Published : 21 Mar 2021 08:11 PM
Last Updated : 21 Mar 2021 08:11 PM
அதிமுகவை இடதுசாரிகளோ, திமுகவோ, காங்கிரஸ் கட்சியோ அழிக்காது. கூட்டணி வைத்துள்ள பாஜகவே அழித்துவிடும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தனித் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னதுரையை ஆதரித்து கீரனூரில் இன்று (மார்ச் 21) நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
''ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தோரது பிள்ளைகள் பிளஸ் 2 முடித்தவுடன் விரைவாகத் தொழில் வாய்ப்புகளைத் தேடிக் கொள்வதற்காக செவிலியர் படிப்பு படித்து வந்தனர். ஆனால், அதற்கும் நீட் தேர்வைக் கொண்டுவந்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நீட் தேர்வை எதிர்க்கும் தைரியம் அதிமுகவுக்கு உண்டா? திமுக ஆட்சி அமையும்போது நீட் தேர்வு இல்லை என்ற நிலை உறுதி செய்யப்படும்.
உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை இருக்குமேயானால், டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்றி இருக்க வேண்டும். புதிய வேளாண் சட்டங்களை நாட்டில் உள்ள உண்மையான விவசாயிகள் யாரும் ஏற்கமாட்டார்கள். நாட்டில் உள்ள சிறுபான்மையின மக்களை அகதிகளாக வெளியேற்றுவதற்காக மத்திய அரசு கொண்டுவந்ததுதான் குடியுரிமைச் சட்டம்.
நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்தை எதிர்த்து அதிமுக வாக்களித்து இருந்தால் இந்தச் சட்டம் நிறைவேறி இருக்காது. இதைச் செய்யாமல், அதிமுகதான் சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவான அரசு என்று தேர்தலுக்காக பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார் தமிழக முதல்வர்.
கஜா புயல் தமிழகத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. விவசாயிகளுக்கு மத்திய அரசு நிவாரணம் கொடுக்கவில்லை. எந்த உதவியையும் செய்யவில்லை. பிஎஸ்என்எல் காயலான் கடைக்குப் போய்விட்டது. ஜவுளிக்கடையில் ஆடித் தள்ளுபடி அறிவிப்பைப் போன்று விமான நிலையங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் இனிமேல் பொதுத்துறையோ, அரசுத் துறையோ இருக்காது.
பெருமுதலாளிகள் நினைத்தால் அவர்களே வங்கிகளைத் தொடங்கிக் கொள்ளலாம் என்ற நிலைதான் வரும். ஒட்டுமொத்தமாக நாட்டையே ஏலம் போடுகிற வேலையைத்தான் மோடி அரசு செய்து வருகிறது.
எல்லா உரிமைகளையும் விட்டுவிட்டுக் கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளது அதிமுக அரசு. தமிழகத்தில் ஊழலைத் தவிர வியாபாரம், விவசாயம் என எதில் வெற்றிநடை போடுகிறது?
தமிழகத்தில் அதிமுக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால், உங்களை (அதிமுக) இடதுசாரிகளோ, திமுகவோ, காங்கிரஸ் கட்சியோ அழிக்கப் போவதில்லை. உங்களோடு கூட்டணி வைத்துள்ள பாஜகவே அழித்துவிடும். இதுதான் பிற மாநிலங்களில் நடந்து வருகிறது என்பதை அதிமுகவினர் உணர வேண்டும்''.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT