Published : 21 Mar 2021 05:35 PM
Last Updated : 21 Mar 2021 05:35 PM

நந்தனம் கோல்ஃப் மைதானத்தில் கிளப் ஹவுஸ் கட்டிடம்: சிஎம்டிஏ அனுமதிக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

சென்னை

நந்தனம் கோல்ஃப் மைதானத்தில் தமிழ்நாடு கோல்ஃப் கூட்டமைப்பின் கிளப் ஹவுஸ் கட்டுவதற்கு திட்ட அனுமதி வழங்கிய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை அண்ணா சாலையில் மாம்பலம் - கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட 77.70 ஏக்கர் அரசு நிலம் 1933 மற்றும் 1935ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாகாண அரசால் காஸ்மோபாலிட்டன் கிளப்பிற்கு குத்தகைக்கு விடப்பட்டது. தரிசு நிலமாக இருந்த அந்த இடத்தில் உறுப்பினர்கள் கோல்ஃப் விளையாடுவதற்கான மைதானமும், கிளப்பிற்கான கட்டிடமும் கட்டப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. பின்னர் ஒவ்வொரு முறையும் குத்தகை முடியும்போது அது நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் கோல்ஃப் விளையாட்டை மேம்படுத்துவதற்காக உருவான தமிழ்நாடு கோல்ஃப் பெடரேசன் தங்களுக்கும் இடம் வழங்க வேண்டுமென அரசிடம் கோரிக்கை வைத்து வந்தது.

அதனை ஏற்ற தமிழக அரசு, காஸ்மோபாலிட்டன் கிளப்புக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தைக் கூட்டுக் குத்தகை அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ள 2001ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. குத்தகை நிலம் மேலாண்மை, நிர்வாகம், கோல்ஃப் விளையாட்டு ஆகியவற்றில் கூட்டாகச் செயல்படும் வகையில் அரசுத் தரப்பு, கிளப் தரப்பு, கூட்டமைப்புத் தரப்பு ஆகியவற்றிலிருந்து தலா 5 பேர் "கவர்னிங் பாடி" என்று சொல்லக்கூடிய அமைப்பும் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு கோல்ஃப் கூட்டமைப்பு, கோல்ஃப் மைதானத்தில் கிளப் ஹவுஸ் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டியது. இதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சிஎம்டிஏ அனுமதியளித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து காஸ்மோபாலிட்டன் கிளப்பின் கவுரவச் செயலாளர் சந்தான கிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் (மேல்முறையீடு) வழக்குத் தொடர்ந்தார்.

அவரது மனுவில், “ஏற்கெனவே கோல்ஃப் விளையாட வரும் உறுப்பினர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய, ஒரு கிளப் ஹவுஸ் இயங்கி வரும் நிலையில், கிளப் ஹவுஸ் கட்ட தங்களின் அனுமதி பெறாமல் அடிக்கல் நாட்டியுள்ளனர். இது, இரு கிளப்களின் கூட்டு ஒப்பந்தத்துக்கு முரணானது மட்டுமல்லாமல், தற்போதைய கிளப் ஹவுஸின் நிதி நிலைக்கும் விரோதமானது” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் ஏ.ஏ.நக்கீரன் அடங்கிய அமர்வு, கோல்ஃப் மைதானத்தில் கிளப் ஹவுஸ் கட்டுவதற்கு திட்ட அனுமதி வழங்கி சிஎம்டிஏ பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, வழக்கை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கில் மேல்முறையீடு மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.ராஜகோபாலன், வழக்கறிஞர் பி.செங்கோட்டுவேல் ஆகியோர் ஆஜரானார்கள். சிஎம்டிஏ தரப்பில் வழக்கறிஞர் பி.வீணா சுரேஷ் ஆஜரானார். தமிழ்நாடு கோல்ஃப் பெடரேசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் மற்றும் வழக்கறிஞர் சி.சீதாபதி ஆகியோர் ஆஜரானார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x