Published : 21 Mar 2021 05:09 PM
Last Updated : 21 Mar 2021 05:09 PM
புதுச்சேரி மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தேசிய ஜனநாயக் கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என பாஜகவைச் சேர்ந்த நடிகை கவுதமி கேட்டுக் கொண்டார்.
ஹெலிகாப்டர் மூலம் இன்று(மார்ச் 21) காரைக்கால் வந்த அவர் நெடுங்காடு(தனி) தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சந்திரபிரியங்காவுக்கு வாக்குகள் கோரி கோட்டுச்சேரி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பின்னர் காரைக்காலில் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக வேட்பாளர்கள் குதி ஜி.என்.எஸ்.ராஜசேகரன் (திருநள்ளாறு), வி.எம்.சி.எஸ்.மனோகரன் ( நிரவி-திருப்பட்டினம்) ஆகியோரை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பாஜக சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள காங்கிரஸ்- திமுக ஆட்சி மீதான குற்றப்பத்திரிகையை நடிகை கவுதமி வெளியிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
‘‘புதுச்சேரி மாநிலத்தில் மிக ஒற்றுமையுடன் கூடிய கூட்டணி அமைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக தெரிகிறது. மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு, அதற்கு நல்ல பொறுப்பான, நிலையான, நேர்மையான ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அப்படியான ஒரு ஆட்சியை தேர்ந்தெடுப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளது. அந்த வாய்ப்பை மக்கள் கைவிட மாட்டார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் ஒரு அரசை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் தேவையற்ற காரணங்களை கூறி மக்களுக்கு எதுவுமே செய்யாமல், கடந்த 5 ஆண்டுகளாக சந்தித்த பல்வேறு சிரமங்களை நினைவில் கொண்டு, புதுச்சேரியை வளர்ச்சிப் பாதையில் ஒரு புதிய திசையை நோக்கி கொண்டு செல்லும் வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
பாஜகவின் குற்றப்பத்திரிகையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது, முறைகேடுகளுக்கு அமைச்சராக இருந்தவர்களுக்கு தொடர்பில்லையா என்று கேட்டதற்கு, ”கண்டிப்பாக எல்லாருக்கும் பொறுப்புண்டு, ஆனால் தலைவராக உள்ள ஒருவரைத்தான் நாம் குறிப்பிடமுடியும்” என்றார்.
நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல் ஆளுநர் மூலம் மத்திய அரசு தடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”ஆளும் கட்சியாக பெரிய வெற்றி பெற்ற பிறகு, அவர்களது வேலையை, பொறுப்பை செய்வதை தடுக்க யாருக்கு உரிமை உள்ளது?
ஒரு முதல்வராக, அமைச்சராக அரசை நடத்த எல்லா உரிமையும் இருக்கும் நிலையில் யாரால் தடுக்க முடியும்? என்று கவுதமி தெரிவித்தார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் துணை நிலை ஆளுநருக்குத்தான் அதிகாரம் உள்ளது, அவர் தடுத்ததால்தான் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என காங்கிரஸார் கூறுவதற்கு உங்களுடைய பதில் என்ன? என்ற வகையில் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில், அங்கிருந்த பாஜகவினர் தொடர்ந்து குரல் எழுப்பத் தொடங்கினர். அவர்களை அமைதிப்படுத்திய கட்சியின் மாநில துணைத் தலைவர் எம்.அருள்முருகன் காங்கிரஸ் அரசின், முதல்வரின் தவறான செயல்பாடுகள் குறித்து பட்டியலிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், கவுதமி பதிலளிக்க முற்பட்டார், ஆனால் கட்சி நிர்வாகிகள் அவரை தடுத்து அழைத்துச் சென்றுவிட்டனர்.
பாஜக மாநில துணைத் தலைவர் எம்.அருள்முருகன் கூறியது: கடந்த 5 ஆண்டுகள் புதுச்சேரியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் பலருக்கு இருந்த வேலையும் போய்விட்டது.
லாபத்தில் இயங்கி வந்த பல்வேறு அரசு சார் நிறுவனங்கள் மூடப்பட்டன. அவற்றில் வேலை செய்த தொழிலாளர்கள் வேலலையின்றி உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக தவறான செயல்பாடுகளை மட்டுமே காங்கிரஸ் அரசு செய்துள்ளது. லஞ்சம், ஊழல் போன்ற செயல்பாடுகள் இந்த அரசில் நடந்துள்ளது. இவற்றையெல்லாம் குறிப்பிட்டு, காங்கிரஸ்-திமுக அரசு மீதான குற்றப் பத்திரிகையை 20-ம் தேதி புதுச்சேரியில் பாஜக வெளியிட்டது.
அது காரைக்காலில் இன்று வெளியிடப்படுகிறது. காங்கிரஸ்-திமுக கூட்டணியை மக்கள் வேரோடு அகற்ற வேண்டும். முதல்வராக இருந்த நாராயணசாமி பயம் காரணமாகவே தேர்தலில் போட்டியிடவில்லை என்றார்.
பாஜக மாவட்டத் தலைவர் துரை சேனாதிபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT