Published : 21 Mar 2021 03:14 AM
Last Updated : 21 Mar 2021 03:14 AM
மதம் சார்ந்த கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை, பாதுகாப்பான இந்தியாவை உருவாக்கியவர்களோடு கூட்டணி வைத்துள்ளோம், என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணி சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் கே.வி.ராமலிங்கம், கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் எம்.யுவராஜா ஆகியோருக்கு ஆதரவு திரட்டும் வகையில், ஈரோடு அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் மின் துறை அமைச்சர் தங்கமணி பேசியதாவது:
அதிமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் வேட்பாளர்களைப் பார்க்காமல், மீண்டும் அதிமுக அரசு அமைய வேண்டும் என்ற நோக்கோடு தேர்தல் பணியாற்ற வேண்டும். குடும்ப கட்சிக்கும், சாமானியர்களின் கட்சிக்கும் இடையே நடக்கும் தேர்தலாகும்.
இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்போது, திமுக காணாமல் போகும்.
இந்த ஆட்சிக்கு மக்களிடம் மட்டுமின்றி, எதிர் கட்சியினரிடம் கூட வரவேற்பு இருப்பதை காண முடிகிறது. ஒற்றுமையான பணியின் மூலம், திமுகவை அகற்றி, தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சியை தொடர செய்ய முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
மதம் சார்ந்த கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம் என எங்களைக் கூறுகின்றனர். பாதுகாப்பான இந்தியாவை உருவாக்கியவர்களுடன் கூட்டணியில் உள்ளோம், என்பதை மக்களிடம் விளக்குங்கள். மாநில அரசுகள், மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து இருந்தால்தான், மாநில வளர்ச்சிக்கான திட்டங்கள், நிதி, வளர்ச்சிப்பணிகளை செய்ய முடியும். இதன் மூலமே, இந்தியாவில் வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT