Published : 21 Mar 2021 03:15 AM
Last Updated : 21 Mar 2021 03:15 AM
வேடசந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் நிரந்தர வேலைவாய்ப்பின்றி மக்கள் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்காக இடம்பெயர்வது தொடர்கிறது. இதற்காக சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டம் மற்றும் மணற்கொள்ளை, தொழிற்சாலை கழிவுகளால் மாசுபட்ட குடகனாறு ஆற்றை சீரமைக்கும் திட்டம் ஆகிய நீண்டகால திட்டங்கள் செயல் படுத்தப்படாததால் வேடசந்தூர் தொகுதி மக்களின் வேதனை தொடர்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் பரப்பளவிலும், வாக்காளர் எண்ணிக்கையிலும் பெரிய தொகுதியாக உள்ளது வேடசந்தூர் தொகுதி. இத்தொகுதியில் வேடசந்தூர், பாளையம், வடமதுரை, அய்யலூர், எரியோடு ஆகிய ஐந்து பேரூராட்சிகள், வடமதுரை, வேடசந்தூர், குஜிலியம்பாறை ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிராம ஊராட்சிகளும் உள்ளன.
வறண்ட பகுதியான இந்த தொகுதியில் உள்ள மக்கள் விவசாயத்தை முழுமை யாக நம்பமுடியாத நிலை. இதனால் இப்பகுதியில் உள்ள நூற்பாலைகளுக்கு அதிக எண்ணிக்கையில் பணிக்கு செல்கின்றனர். பலர் அருகிலுள்ள கரூர் மாவட்டத்திற்கு வேலைவாய்ப்பு தேடி செல்கின்றனர். நூற்பாலைகள் தவிர வேறு தொழில்கள் இப்பகுதியில் இல்லை என்பதால் பலர் வருமானத்திற்காக பிற மாவட்டங்களுக்கு வேலைதேடிச் செல்லும் நிலையும் இன்றுவரை தொடர்கிறது.
வேடசந்தூர் தொகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டம் ஏட்டளவில் இருந்தும் செயல்பாட்டுக்கு வராததால் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் வழித்தட கிராமங்களில் ஓரளவு குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இருந்தபோதும் நிலத்தடி நீர்மட்டம் குறைவாகவே உள்ளது.
குடகனாறு அணையில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறுகிறது. இதை யாரும் கண்டுகொள்ளாத நிலைதான். தொகுதிக்குள் உள்ள குடகனாறு அணை பல ஆண்டுகளுக்கு பின் நீர்வரத்து ஏற்பட்ட நிலையில் வழிநெடுகிலும் தொழிற்சாலை கழிவுகளால் மாசுபட்ட நீர் விவசாயத்திற்கு கூட பயன்படுத்த முடியாதநிலையில் உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மணல் கொள்ளை, சாக்கடை கழிவுநீர், தொழிற்சாலை கழிவுநீர் கலப்பது, அடர்ந்துள்ள கருவேல முட்செடிகள் என ஆற்றின் தன்மையே மாறிவிட்டது. மாசுபட்ட குடகனாறை மீட்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் அதற்கு எந்தவித நடவடிக்கையும் இல்லை.
நிறைவேறாத திட்டங்கள்
குடகனாறை சீரமைப்பேன், உள்ளூரில் வேலைவாய்ப்பை உருவாக்க சிப்காட் கொண்டுவருவேன் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் மக்கள் மத்தியில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கிராமப்புறங்களுக்கு சாலை அமைத்தல், சிறிய பாலங்கள் கட்டுதல், குடிநீர் தொட்டி கட்டுதல் போன்ற அடிப்படை பணிகளே செய்யப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க சிப்காட் தொழிற்பேட்டை கொண்டுவர கடைசி நேரத்தில் முயற்சி மேற்கொண்டார் தற்போதைய எம்.எல்.ஏ.
இதற்கு “பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுக வேடசந்தூர் பகுதிக்கு தொழிற்பேட்டை கொண்டுவர நினைத்திருந்தால் கொண்டு வந்திருக்கலாம், தேர்தல் வருவதால் கடைசிநேரத்தில் முயற்சிப்பது போல் காட்டிக்கொள்கின்றனர்” என ஜோதிமணி எம்.பி., குற்றம்சாட்டினார்.
ஐந்து முனை போட்டி
கடந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் சிவசக்திவேலை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பரமசிவம் எம்.எல்.ஏ., இந்தமுறை மீண்டும் போட்டியிடுகிறார். இந்தமுறை இவரை எதிர்த்து திமுக சார்பில் காந்திராஜன் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே அதிமுக சார்பில் வேடசந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று துணை சபாநாயகராக பதவி வகித்தார். தற்போது திமுக சார்பில் போட்டியிடுகிறார். தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர், சமுதாய செல்வாக்கு, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு என வலுவான போட்டியை அதிமுக வேட்பாளருக்கு கொடுத்து வருகிறார்.
மேலும் அமமுக சார்பில் ராமசாமிக்கு அவரது கட்சி வாக்குகள் மட்டுமின்றி கூட்டணிக் கட்சியான தேமுதிக வாக்குகளும் கைகொடுக்கும். நாம் தமிழர் கட்சி சார்பில் போதுமணி, மக்கள் நீதி மய்யம் சார்பில் வெற்றிவேல் ஆகியோரும் களத்தில் தங்களுக்கான ஆதரவை தனித்து திரட்டி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT