Published : 21 Mar 2021 03:15 AM
Last Updated : 21 Mar 2021 03:15 AM
தேனி மாவட்ட தேர்தல் பிரச்சாரத்துக்காக கேரளாவில் இருந்து வாடகை ஜீப்கள் அதிகளவில் போடிக்கு வந்துள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், பரிசீலனை முடிந்த நிலையில் பிரச்சாரம் தற்போது தொடங்கி உள்ளது. பொதுவாக பிரதான கட்சிகள் பலவும் தங்கள் பிரச்சாரத்துக்காக கேரள ஜீப்களையே அதிகம் பயன்படுத்துவது வழக்கம். ஜீ்ப்களின் மேற்புரம் திறந்தநிலையில் இருப்பதால் வேட்பாளர்கள் நின்றபடியே பேசும் போது நான்குபுறமும் உள்ள பொதுமக்களுக்கு தெளிவாக தெரியும் என்பதால் இந்தவகை ஜீப்களையே அரசியல்வாதிகள் விரும்புகின்றனர்.
இந்த ஜீப்களின் முன்பகுதியிலே மினி ஜெனரேட்டரும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வேட்பாளர்கள் இரவிலும் நன்கு தெரியும்படி விளக்குகளை பொருத்தி உள்ளனர். மேலும் மைக்செட், ஸ்பீக்கர் உள்ளிட்ட வசதியும் வண்டியிலே உள்ளது. மற்ற வாகனங்களை விட அதிக இழுவைத்திறன் உள்ளதால் குறுகலான, ஏற்றமான பகுதிகளிலும் எளிதாகவும், விரைவாக செல்ல முடியும். இதற்காக முக்கிய கட்சி வேட்பாளர்கள், பேச்சாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த ஜீப்களையும் அதிகம் விரும்புகின்றனர்.
இதனால் கேரளாவில் இருந்து ஏராளமான ஜீப்கள் கொண்டுவரப்பட்டு, ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்துக்கும் பயன்படுத்தப்படுவது வழக்கம். தற்போது இடுக்கி மாவட்டத்தில் இருந்து போடிக்கு 10-க்கும் மேற்பட்ட திறந்தவெளி ஜீப்கள் வந்துள்ளன.
ஓட்டுநருக்கு சாப்பாடு, படி தங்கும் வசதியை ஏற்படுத்தித் தருவதுடன் எரிபொருளும் நிரப்பி விடுகின்றனர். இதுபோக வாடகையாக ஒருநாளைக்கு ரூ.2500 முதல் ரூ.3ஆயிரம் வரை கட்சியினர் தருகின்றனர். இதற்கு உள்ளூர் வாகன ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் கேரள ஜீப்களையே அரசியல்வாதிகள் பயன்படுத்துகின்றனர். இதனால் உள்ளூர் வாகனங்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே நம் பகுதி ஜீப்களையும் பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT